தேசிய தினத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறை வருகிறது. இதனைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பலர் பயணம் செய்யலாம் என்பதால் எல்லைச் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசலை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவாஸ், ஜோகூர் சோதனைச் சாவடிகளில் குடிநுழைவு சோதனைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம் என்பதால் கூடுதல் நேரத்தை ஒதுக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ), ஆகஸ்ட் 8 முதல் 13 வரை இரு சோதனைச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டது.
அந்தக் காலக்கட்டத்தில் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி, சாலைத் தடங்களுக்கான ஒழுங்கைக் கடைப்பிடிக்குமாறு பயணிகளை ஐசிஏ கேட்டுக் கொண்டது.
சுமூகமான பயணத்திற்கு காரில் செல்பவர்கள் கடப்பிதழுக்குப் பதிலாக கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்துமாறு அது அறிவுறுத்தியது.
அது மட்டுமல்லாமல், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு இரு நிலச் சோதனைச் சாவடிகளின் போக்குவரத்து நிலவரங்களை முன்கூட்டியே அறிந்து செயல்படுமாறும் அது ஆலோசனை வழங்கியுள்ளது.
மே 23 முதல் ஜூன் 25 வரையிலான கடந்த ஜூன் மாத பள்ளி விடுமுறையின் உச்ச நேரத்தில் காரில் சென்றவர்கள் குடிநுழைவுச் சோதனையை முடிக்க மூன்று மணி நேரம் வரை காத்திருக்க நேரிட்டது.
அந்தக் காலக்கட்டத்தில் சராசரியாக 480,000 பயணிகள் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றனர். ஜூன் 14ஆம் தேதி அன்று மட்டும் சாதனை அளவாக 530,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.