குலோயி (உண்மைப் பெயரன்று) தனது முதல் முழுநேர வேலையில் ஓராண்டாகப் பணியாற்றி வந்தார். 2023 செப்டம்பரில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது தனது வீட்டுக்கு அருகில் கோவனில் உள்ள மருந்தகத்துக்குச் சென்றார். ஆனால் அவர் எடுத்த இரண்டு நாள் மருத்துவ விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
இது பற்றி தனது நிறுவனத்தின் அவர் விளக்கம் கேட்டார்.
“மனிதவளப் பிரிவின் நிர்வாகி என்னிடம் வேலை நியமனக் கடிதத்தைக் காட்டினார். அதில் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகம், பலதுறை மருந்தகம் ஆகியவற்றால் வழங்கப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மட்டுமே ஆதாரமாகக் கருதி ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது,” என்று நடந்த சம்பவத்தை 20 வயதான குலோயி நினைவுகூர்ந்தார்.
நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகம் கிளமெண்டியில் இருப்பதாலும் பலதுறை மருந்தகத்தில் அதிக நேரம் காத்திருக்க நேரிடும் என்பதாலும் அருகில் உள்ள மருந்தகத்துக்குச் சென்றதாக அவர் கூறினார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு நிறுவனத்தின் கணக்குகளை கவனிக்கும் வேலையை அவர் கைவிட்டார்.
பிறகு தனக்குச் சேர வேண்டிய ஊதியம் குறித்து ‘டிஏடிஎம்’ எனும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியிடம் அவர் புகார் அளித்தார். இரண்டு வாரங்களில் அவருக்குச் சேர வேண்டிய $135 கிடைத்தது.
குலோயியைப் போல பல ஊழியர்கள் தங்கள் நிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சு, ‘டிஏடிஎம்’மிடம் புகார் அளித்துள்ளனர்.
பொருளியல் சவால்கள் இருந்தபோதும் 2023ஆம் ஆண்டில் அதிக உள்ளூர், வெளிநாட்டு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர் என்று ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் மனிதவள அமைச்சும் டிஏடிஎம்மும் கூட்டாக தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆண்டில் மொத்தம் 9,397 கோரிக்கைகளும் முறையீடுகளும் மனிதவள அமைச்சிடமும், டிஏடிஎம்மிடமும் அளிக்கப்பட்டன.
அவற்றில் 86 விழுக்காடு, சம்பளம் தொடர்பானவை. எஞ்சியவற்றில் பெரும்பாலானவை தவறான வேலை நீக்கம் தொடர்பிலானது.
கோரிக்கை அல்லது விண்ணப்பங்களை செய்திருந்தோரில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்டவர்கள் சிங்கப்பூரர்கள்..எஞ்சியவை வெளிநாட்டவர்களின் கோரிக்கைகளாகும்.
2023ஆம் ஆண்டில் இப்படிப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கொள்ளைநோய்க்கு முந்தைய 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்தே காணப்பட்டது.