கப்பல் எரிபொருள் திருட்டு: இருவருக்கு 23 ஆண்டுகளுக்கு மேல் சிறை

2 mins read
dda4fe05-58e1-4001-b419-fe9a2188a4ab
நேர்மையற்ற ஊழியர்கள் $120 மில்லியனுக்கும் மேலான கப்பல் எரிபொருளை புலாவ் புக்கோம் ஷெல் நிறுவனத்திலிருந்து திருடினர். அப்படி திருடிய எண்ணெய்யை கப்பல் துறையில் நங்கூரமிட்டு இருந்த மற்ற கப்பல்களுக்கு விற்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புலாவ் புக்கோம் தீவில் உள்ள ஷெல் நிறுவன எரிபொருளைத் திருட கூட்டுச் சதியில் ஈடுபட்ட இரு ஷெல் முன்னாள் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2ஆம் தேதி) கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய்த் திருட்டு சிங்கப்பூர் வரலாற்றில் மிகப் பெரிய கப்பல் எரிபொருள் திருட்டு என்று கூறப்படுகிறது.

முஸாஃபர் அலி கான் முகம்மது அக்ரம், என்ற 42 வயது நபருக்கு 26 ஆண்டுகள் 6 மாத சிறைத்தண்டனையும் கோ சூன் வெய் என்ற 40 வயது நபருக்கு 23 ஆண்டுகள் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டுச் சதித் திட்டத்தின் மூலம் முஸாஃபர் குறைந்தது $1.3 மில்லியன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்ட கோவுக்கு குறைந்தது $1 மில்லியன் கிடைத்ததாகவும் தெரியவந்துள்ளது. அவர்களுக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு சொகுசு கைக்கடிகாரங்கள், வெளிநாட்டில் சொத்து, கார்கள் ஆகியவற்றை இருவரும் வாங்கியுள்ளனர்.

அவ்விருவரும் கப்பல் எரிபொருள் திருட்டில் ஈடுபட்ட நேர்மையற்ற ஊழியர் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள். அவர்கள் ரகசியமாக $120 மில்லியனுக்கும் மேலான 200,000 டன்னுக்கு அதிகமான கப்பல் எரிவாயுவை 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் திருடியுள்ளனர்.

இந்தக் குற்றக் கும்பல் குழுவில் முஸாஃபரும் கோவும் கண்காணிப்பாளர்களாக செயல்பட்டனர். இந்தக் குழுவின் முக்கிய பணியே கப்பல் துறையில் இருக்கும் கப்பல்களில் எரிபொருளை நிரப்புவதுதான்.

அவர்கள் கைதானபோது இவர்களின் மாதச் சம்பளம் கிட்டத்தட்ட $6,000 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சதித் திட்டத்தின் மூளையாக தொடக்கத்திலிருந்தே செயல்பட்ட ஜுவான்டி புங்கோட் என்பவரால் முஸாஃபரும் கோவும் பணியில் சேர்க்கப்பட்டனர். இதில் குறைந்தது $5.6 மில்லியன் பயன்பெற்ற ஜுவான்டிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு 29 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முஸாஃபர் 2007ஆம் ஆண்டு கடைசிப் பகுதிக்கும் 2008ஆம் ஆண்டு தொடக்கத்திலும் பணியில் சேர்க்கப்பட்டார். அவர் பணியில் சேர்க்கப்பட்டதிலிருந்தே இந்தத் திருட்டில் ஈடுபடத் தொடங்கினார்.

பின்னர் 2015ஆம் கோ பணியில் சேர்ந்ததும் அவரையும் இந்தத் திருட்டில் ஜுவான்டியும் முஸாஃபரும் சேர்த்துக்கொண்டு அவருக்கு இக்குற்றத்தில் ஈடுபடுவது எப்படி எனக் கற்றுத் தந்தனர்.

குறிப்புச் சொற்கள்