சிங்கப்பூர் ஏர்லைன்சும் (எஸ்ஐஏ), மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட்டும் ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலை 1.30 மணியிலிருந்து ஈரானிய ஆகாயவெளியைத் தவிர்த்து வருகின்றன என்று எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 31ஆம் தேதி ஈரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு ஈரானிய ஆகாயவெளியைத் தவிர்க்கும் முடிவை இரு விமான நிறுவனங்களும் எடுத்துள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட எஸ்ஐஏ, ஸ்கூட் விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து அதற்கு ஏற்ப தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றார் அவர்.
இதுவரை எந்த விமானச் சேவையும் இதன் காரணமாக ரத்து செய்யப்படவில்லை.
“எங்களுடைய பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்.
“ஆனால் பாதை மாற்றம் காரணமாக சில விமானங்களின் சேவைகள் வழக்கமான நேரத்தைவிட தாமதமாகும்.
“வாடிக்கையாளர்களின் அசெளகரியத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்,” என்று அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கும் ஆம்ஸ்டர்டாம், பிரஸல்ஸ், கோப்பன்ஹேகன், ஃபிராங்க்ஃபர்ட், இஸ்தான்புல், லண்டன், நியூயார்க்(ஜேஎஃப்கே), நியூயார்க் (நுவார்க்), மான்செஸ்டர், மிலான், மியுனிக், பாரிஸ், ரோம், ஸூரிக் ஆகிய இடங்களுக்கும் இடையிலான எஸ்ஐஏ சேவை மாற்றத்தால் பாதிக்கப்படும். சிங்கப்பூர், ஏதென்ஸ் இடையிலான ஸ்கூட் விமானச் சேவைகளும் பாதிக்கப்படும்.