மெக்பர்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு மற்றும் முனைவர் மன்னை இராஜகோபாலன் இணைந்து நடத்திய மேடைப் பேச்சாற்றல் பயிற்சி ஜூலை 28ஆம் தேதி மெக்பர்சன் சமூக மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, குறிப்பாக உயர்நிலை 2 முதல் 4 வரை பயிலும் மாணவர்களுக்குப் பேச்சுத் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிப் பட்டறையாக அமைந்தது.
சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து பெரும்பாலான மாணவர்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
பயிற்சிப் பட்டறையின் இறுதியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ‘நாளை நமதே’ என்ற தலைப்பு தரப்பட்டு மேடை பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டது. இப்போட்டியின் நடுவர்களாக திருமதி சுமதி நாகராஜன், திருமதி ஜெயலட்சுமி முத்துக்குமார் இருவரும் பங்குகொண்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் திறமையைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மெக்பெர்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, மன்னை இராஜகோபாலன் சார்பாக பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்ட பெற்றோரும் தொடக்கநிலை மாணவர்களில் ஒரு சிலரும் தாமாகவே முன்வந்து மேடையில் பேசி பரிசுகள் பெற்றனர்.
மெக்பர்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் முத்துக்குமார், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டிப் பேசினார்.
நாளைய தலைவர்களாகவும், மிகச் சிறந்த சமூகத்தை உண்டாக்கும் பேச்சாளர்களாகவும் திகழக் கூடிய இன்றைய இளையர்கள் அடியெடுத்து வைக்கும் முதல் படியாக இப்பயிற்சிப் பட்டறை அமைந்தது.