மோசடிகளுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக அதிகமான நாடுகள் மோசடி ஒழிப்பு நிலையங்களை ஏற்படுத்தி வருகின்றன.
மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றோடொன்று இணைந்து பணியாற்றுவதற்கு ஏதுவாக அத்தகைய நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவும் இழந்த பணத்தை மீட்பதில் பொதுமக்களுக்கு உதவவும் உலகளாவிய சட்ட அமலாக்க அமைப்புகள் திறம்பட ஒருங்கிணைந்து செய்ய வேண்டியவை அதிகம் உள்ளன என்று காவல்துறை உதவி ஆணையர் ஐலீன் யாப் கூறினார்.
சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி ஒழிப்புத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் அவர், கடந்த புதன்கிழமை (ஜூலை 31) செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ஒவ்வொரு நாடும் மோசடி ஒழிப்பு நிலையங்களை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“மோசடி தொடர்பான விவகாரங்களில் நாடுகள் ஒன்றுக்கொன்று நேரடியாகத் தொடர்புகொண்டு குழுவாகச் செயல்பட அத்தகைய நிலையம் உதவிபுரியும்.
“ஒவ்வொரு நாட்டிலும் மோசடி ஒழிப்பு நிலையம் இருந்தால் தகவல்களை வேகமாகப் பரிமாறிக்கொள்ள முடியும். நாடு விட்டு நாடு கடத்திச் செல்லப்படும் மோசடிப் பணத்தின் தடயத்தை அறிந்து அதனை மீட்கவும் இணந்து செயல்பட முடியும்.
“உதாரணத்திற்கு, மோசடி நடைபெற்ற பின்னர் அதனைக் கண்டுபிடிக்க குறிப்பிட்டதொரு நாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்றிணைவதற்குள் மோசடிப் பணத்தின் பெரும்பாலான தொகை மாயமாகி விடுகிறது,” என்று திருவாட்டி யாப் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
2022 ஆகஸ்ட் முதல் 2023 ஆகஸ்ட் வரை உலக அளவில் மோசடிச் செயல்கள் மூலம் US$1.02 டிரில்லியன் (S$1.4 டிரில்லியன்) பணம் திருடப்பட்டு உள்ளது.
அந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரில் அதிகமானோர் பணத்தை இழந்தனர். சராசரியாக ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட US$4,000 பறிகொடுத்து உள்ளனர்.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற மோசடிச் சம்பவங்கள் சாதனை அளவைத் தொட்டன. அந்த ஆண்டில் மட்டும் 46,563 மோசடிச் சம்பவங்கள் பதிவாயின. அதற்கு முந்திய ஆண்டில் பதிவான 31,728 சம்பவங்களைக் காட்டிலும் அது 46.8 விழுக்காடு அதிகம்.
2021ஆம் ஆண்டு உலகம் முழுவதும் மோசடிகளில் பறிகொடுத்த பணம் US$55.3 பில்லியன் அதற்கு முந்திய 2020ஆம் ஆண்டு அந்தத் தொகை US$ 47.8 பில்லியனாக இருந்தது.
‘உலக மோசடி எதிர்ப்புக் கூட்டணி’ என்ற பொருளைக் கொண்ட லாபநோக்கமற்ற அமைப்பும் ‘ஸ்கேம்அட்வைசர்’ என்னும் தரவுச் சேவை வழங்கும் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிய வந்தன.