சிங்கப்பூரில் அதிகமான இளையர்கள் போதைப்பொருள் உட்கொண்ட ஒருவரை தனிப்பட்ட முறையில் தெரிந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான தேசிய மன்றம் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்து உள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 13 வயது முதல் 29 வயது வரையிலான 3,000 இளையர்கள் பங்கேற்றனர். போதைப்பொருள் உட்கொண்ட ஒருவர் பற்றி தாங்கள் அறிந்திருப்பதாக அவர்களில் 18 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு கூறியவர்கள் 10.6 விழுக்காடு. கடந்த ஆண்டு அந்த விகிதம் அதிகரித்தது.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம், ஆய்வு கண்டறிந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
முப்பது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய 1,500 பெரியோர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.
சிங்கப்பூரில் போதைப் புழக்கத்திற்கு ஆளாகும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆய்வறிக்கை வெளிவந்து உள்ளது.
இளையர்களிடையே போதைப்பொருளை அனுமதிக்கும் மனப்போக்கு அதிகரித்துக் காணப்படுவதும் ஆய்வில் தெரிய வந்ததாக கருத்தரங்கில் தொடக்க உரையாற்றியபோது பேராசிரியர் ஃபைஷல் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆய்வில் பங்கேற்ற இளையர்களில் 90 விழுக்காட்டினர், சிங்கப்பூரில் போதைப்பொருள் உட்கொள்வது சட்டவிரோதம் என்பது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டனர். பெரியோரிடையே அந்த விகிதம் 96 விழுக்காடாக இருந்தது,” என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், “இதில் அதிகக் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், புகையிலையைக் காட்டிலும் போதைப்பொருள் அதிக ஆபத்தானது என்பதை உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 60 விழுக்காட்டினர் மட்டுமே ஏற்றுக்கொள்கின்றனர்.
“போதைப்பொருள்தான் அதிக ஆபத்தானது என்று அறிவியல் சான்றுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்திருக்கும் வேளையிலும் 60 விழுக்காட்டு மாணவர்களுக்கே அதில் உடன்பாடு உள்ளது தெரிய வந்து உள்ளது.
“இளைய போதைப்பொருள் புழங்கிகள் தொடர்பாகவும் சில கவலைகள் உள்ளன.
“2022ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 20 வயதுக்கும் குறைந்த போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை 11 விழுக்காடு அதிகரித்து உள்ளது.
“போதைப்பொருளை உட்கொள்ளும் பழக்கம் மிகக் குறைந்த வயதிலேயே தொடங்கி விடுவதாக 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் வாழ்க்கைபாணி ஆய்வு கூறியது.
“அந்த சராசரி வயது 16க்குக் கீழ் என்றும் மனநலக் கழகம் நடத்திய அந்த ஆய்வு கண்டறிந்தது,” என்று துணை அமைச்சர் விளக்கினார்.
போதைப்பொருளின் தீங்குகள் குறித்து இளையர்களிடம் போதிப்பதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

