எந்தவொரு தனிப்பட்டவரும் சிங்கப்பூரில் மதிக்கப்படுவதையும் இனம், மொழி மற்றும் சமயத்திற்கு அப்பால் சரிசமமாக நடத்தப்படுவதையும் எதிர்பார்க்கலாம் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
இனவாதம் தொடர்பான சம்பவங்களைப் பற்றிய கவலைகள் சிங்கப்பூரில் நீடிக்குமா அல்லது நிலைமை மேம்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது திரு லீ இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார்.
இளையர்களுடன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அவர் பங்கேற்றுப் பேசினார். தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (கிழக்கு வளாகம்) நடைபெற்ற அந்நிகழ்வில் ஏறத்தாழ 300 இளையர்கள் கலந்துகொண்டனர்.
இன, சமய நல்லிணக்கத்தை வளர்க்கும் OnePeople.sg அமைப்பு கலந்துரையாடலை நடத்தியது.
“பொதுவாக, எல்லாம் சரியாகவே இருக்கின்றன,” என்று கூறிய திரு லீ, “தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரம் குற்றத்திற்குக் காரணமாகக் கூடாது,” என்றார்.
“சிங்கப்பூரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படலாகாது. மேற்கத்திய நாடுகளில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
“எவரையும் புண்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.
“சில நேரங்களில், உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை நான் சொல்லப் போகிறேன் என்றுகூட சிலர் கூறுவார்கள். அப்படிப்பட்ட நிலையில், நான் சொல்வதைக் கேட்க நீங்கள் விரும்பவில்லை என்றால், நான் எதையும் சொல்லத் தொடங்கும் முன்னரே நீங்கள் அங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறுவது, மக்களிடையே முதிர்ச்சி பெற்ற நடைமுறைக்குரிய பழக்கமாகாது,” என்றார் திரு லீ.
தொடர்புடைய செய்திகள்
ஒற்றுமையாய் வாழ புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, மரியாதை ஆகிய பண்புகளை சிங்கப்பூரர்கள் கடைப்பிடிக்க வழிவகை செய்யவேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

