டாக்கா: பங்ளாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டத்தில் குறைந்தபட்சம் 27 பேர் கொல்லப்பட்டனர். இது, சிங்கப்பூர் நேரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி நிலவரம்.
பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகக் கோரி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளையர்கள் ஒன்றுதிரண்டனர்.
அவர்களில் பலர் கையில் தடியுடன் காணப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து அரசாங்க ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்ததும் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக மாறியது.
அதில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. அவர்களில் மூவர் வடக்கு மாவட்டமான பாப்னாவில் உயிரிழந்த நிலையில் இருவர் ரங்க்பூர் மாவட்டத்தில் கொல்லப்பட்டனர்.
முன்ஷிகஞ்ச் மாவட்டத்திலும் மகுரா மாவட்டத்திலும் மேலும் மூவர் மரணமடைந்ததாக காவல்துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் ஏஎஃப்பி செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
மேலும் பல பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாண்டோர் எண்ணிக்கை 23க்கு அதிகரித்தது. பலருக்குக் கத்திக்குத்து காயங்களும் மேலும் சிலரின் உடலில் துப்பாக்கிக் குண்டு துளைத்த காயங்களும் இருந்ததாக அவர்கள் கூறினர்.
முன்னதாக, நாடளாவிய ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டத் தலைவர்களில் ஒருவரான ஆசிஃப் மஹமுத், பெரும் போராட்டத்திற்குத் தயாராகுமாறு ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“பங்ளாதேஷின் விடுதலைக்காக மூங்கில் கழிகளுடன் தயாராகுங்கள்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
அரசாங்க வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை எதிா்த்து அண்மையில் பங்ளாதேஷில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன.
போராட்டம் வன்முறையாக மாறியதில் 200க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். அதனைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டை 5 விழுக்காடாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்புக்குப் பிறகு பங்ளாதேஷில் சில நாள்கள் அமைதி நிலவினாலும், போராட்டம் எந்த நேரத்திலும் மீண்டும் வெடிக்கக்கூடிய நிலை இருந்தது.
பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண பேச்சு நடத்த சனிக்கிழமை வருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பை போராட்டக் குழுவினர் நிராகரித்தனர்.
பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகுவதே தங்களது கோரிக்கை என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர் இயக்கத்துடன் முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இணைந்து வருகின்றனர்.
முன்னாள் ராணுவத் தளபதியான இக்பால் கரிம் புயியான் தமது ஃபேஸ்புக் முகப்புப் படத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதை உணர்த்தும் படத்தை இணைத்துள்ளார்.
இதற்கிடையே, சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) டாக்காவில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் ராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றிய தற்போதைய ராணுவத் தளபதி வாக்கர்-உஸ்-ஸமான், “பங்ளாதேஷ் ராணுவம் நம்பிக்கையின் சின்னம்,” என்றார்.
“ராணுவம் எப்போதும் மக்களின் பக்கம் இருக்கும். மக்களின் நன்மைக்காகச் செயல்படும் அதே நேரம் அரசாங்கத்தின் தேவைக்கும் ராணுவம் செவிமடுக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.