தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), குறைந்த விலைக்கு வழங்கப்படும் தனது இரு காப்புறுதித் திட்டங்களுக்கான சந்தா கட்டணங்களைத் தொடர்ந்து கட்டுப்படியான அளவில் வைத்திருக்கப்போவதாக உறுதியளித்துள்ளது.
ஜெர்மானிய காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ், என்டியுசியில் முதலீடு செய்யவிருப்பதாகச் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றில் என்டியுசி தலைவர் கே. தனலெட்சுமி, பொதுச் செயலாளர் இங் சீ மெங் இருவரும் மேற்கண்டவாறு உறுதியளித்தனர்.
அலியான்ஸ், என்டியுசி இன்கம் காப்புறுதி நிறுவனத்தில் $2.2 பில்லியன் முதலீடு செய்து அதில் 51% பங்குகளை வாங்க முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதை இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் சுவீ சியே கடிதம் ஒன்றின் மூலம் குறைகூறியதுடன், அரசாங்கம் இதில் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதன் தொடர்பில் திரு டான், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவர் கான் கிம் யோங்குக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் சமூக ஊடகங்களிலும் வெளிவந்தது.
இதற்குப் பதிலளித்த என்டியுசி என்டர்பிரைஸ், என்டியுசி இன்கம் காப்புறுதி நிறுவனங்கள், திரு டான் எழுப்பிய ஆட்சேபணைகள் அலியான்ஸ் முதலீடு தொடர்பாக என்டியுசி நிறுவனங்களின் பங்காளிகள் மீது அவதூறு கூறும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. அத்துடன், அதற்கு சரியான ஆதாரமும் இல்லை, அது நியாயமானதும் அல்ல என்று அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.
ஜெர்மானிய காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ் ஜூலை 17ஆம் தேதி $2.2 பில்லியன் முதலீடு செய்து, என்டியுசி இன்கம் காப்புறுதி நிறுவனத்தில் குறைந்தது 51 விழுக்காடு பங்குகளை வாங்க முன்வந்தது. இது நிறைவேறினால், என்டியுசி இன்கம் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கின் மதிப்பும் $40.58ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஒப்புநோக்க, என்டியுசி இன்கம்மின் ஒரு பங்கின் மதிப்பு, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியில் $29.55 என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் முதலீடு நிறைவேறினால், சிறுபான்மை பங்குதாரர்களின் செயல்பாட்டைப் பொறுத்து, என்டியுசி இன்கம் அதில் கணிசமாக 49 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
என்டியுசி என்டர்பிரைஸ் நிறுவனம் தற்பொழுது இன்கம் நிறுவனத்தில் 72.8% பங்குகளை வைத்துள்ளது. சிறுபான்மை பங்குதாரர்கள் 16,000 பேர் மீதமுள்ள 27.2% பங்குகளை வைத்துள்ளனர்.
திரு டான், என்டியுசி இன்கம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2007ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை இருந்துள்ளார். பின்னர் 2013ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை என்டியுசி என்டர்பிரைஸ் நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் பதவி வகித்துள்ளார்.