தெமாசெக்கில் மூன்று மூத்த தலைவர்கள் புதிதாக நியமனம்

தெமாசெக்கில் மூன்று மூத்த தலைவர்கள் புதிதாக நியமனம்

2 mins read
b9994ca2-56ec-4f66-ae22-742526e380a9
(இடமிருந்து) திரு கேப்ரியல் லிம், திரு எங் ஐய்க் மெங், டாக்டர் தினேஷ் கன்னா. - படம்: தெமாசெக்

சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் தனது மூத்த தலைமைத்துவப் பட்டியலில் மூன்று புதியவர்களை இணைத்து உள்ளது.

நிறுவன உத்தியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவும் முதலீட்டுப் பட்டியலில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் அவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெமாசெக் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்தது.

வர்த்தக, தொழில் அமைச்சின் கொள்கை வகுப்புக்கான நிரந்தரச் செயலாளராக இருக்கும் கேப்ரியல் லிம் மெங் லியாங் அந்த மூன்று மூத்த நிர்வாகிகளில் ஒருவர்.

தெமாசெக் நிறுவன உத்திப் பிரிவின் இணைத் தலைவராக அவர் அக்டோபர் 1ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொள்வார். மற்றோர் இணைத் தலைவராக தெமாசெக்கில் பணியாற்றும் திருவாட்டி லிம் மிங் பெய் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இரண்டாவது புதியவரான எங் ஐய்க் மெங் தெமாசெக் முதலீட்டுப் பட்டியல் மேம்பாட்டுக் குழுவில் செப்டம்பர் 1ஆம் தேதி இணைவார்.

புதியவர்களில் மூன்றாமவர் தினேஷ் கன்னா. இவரும் தெமாசெக் முதலீட்டுப் பட்டியல் மேம்பாட்டுக் குழுவுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். அக்டோபர் நடுப்பகுதியில் அவர் அந்தக் குழுவில் இணைவார் என்று தெமாசெக் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் தினேஷ் கன்னா.

மூவரில் ஒருவரான திரு கேப்ரியல் லிம், 48, உத்தி மேம்பாட்டிலும் நிறுவன அமைப்பு நிர்வாகத்திலும் பழுத்த அனுபவம் உடையவர். பொதுத் துறையில் பணியாற்றியதுடன் தனியார் துறையுடனும் விரிவான ஈடுபாட்டைக் கொண்டவர் அவர்.

பொதுச் சேவையில் 24 ஆண்டு காலம் பணியாற்றிய பின்னர் செப்டம்பர் 1ஆம் தேதி அதிலிருந்து விலகுகிறார். 2000ஆம் ஆண்டு பொதுச் சேவையில் இணைந்த அவர், பல்வேறு அமைச்சுகளில் பணியாற்றினார்.

2011 முதல் 2014 வரை அப்போதைய பிரதமர் லீ சியன் லூங்கின் முதன்மை தனிச் செயலாளராக அவர் இருந்தார்.

குறிப்புச் சொற்கள்