பொதுநலன் உறுதிமொழி எடுத்துக்கொண்ட சட்டத்துறை மாணவர்கள்

1 mins read
2a76cf9b-a9d8-40bb-a4cc-ffaa76ce2e05
நன்னெறியைக் கட்டிக்காப்பதற்கான உறுதிமொழியை ஏறத்தாழ 60 மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். - படம்: எஸ்யுஎஸ்எஸ்

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் (எஸ்யுஎஸ்எஸ்) சேர்ந்த 60க்கும் மேற்பட்ட, சட்டத்துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் அத்துறையின் மூலப் பண்புகளைக் கட்டிக்காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பொதுநலத்திற்காகப் பணியாற்றவும் நீதியை நிலைநாட்டவும் தாங்கள் நேர்மையுடன் செயல்பட அந்த மாணவர்கள் உறுதி எடுத்துள்ளதாகக் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) வெளியிட்ட செய்தி அறிக்கையில் பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.

சட்டத்துறைக்கான நன்னெறி, நிபுணத்துவச் செயற்குழுவின் இடைக்காலப் பரிந்துரைகளை ஒட்டி இந்த உறுதிமொழி எடுக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

வருங்காலத்தில் சட்டத்துறையில் பணியாற்ற விரும்புவோர் என்ற முறையில், அவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உறுதிமொழியின் நோக்கம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது.

பொது நோக்கை கட்டமைப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த உறுதிமொழி எடுக்கும் நடவடிக்கை, இனி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும்.

“இந்த உறுதிமொழியின் அறிமுகம், காலத்திற்கேற்றதாய் அமைந்துள்ளது; வரவேற்பைப் பெற்றுள்ளது. இது, சட்டத் துறையில் நிபுணத்துவத்துக்கும் நன்னெறிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் முயற்சியாக உள்ளது,” என்று பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரித் தலைவரான பேராசிரியர் லெஸ்லி சியூ தெரிவித்தார்.

100க்கும் அதிகமான முழுநேர, பகுதிநேரப் பாடத்திட்டங்களை வழங்கும் இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை 47,000 பேர் பயின்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்