தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வாழும் நாளில் உடல் வலியை நினைத்து வாடுவதற்குப் பதில் கொண்டாட்ட உணர்வில் திளைக்க விரும்பி தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க முடிவெடுத்தார் இந்த 53 வயது மாது.

40 ஆண்டுகளுக்குப்பின் நனவான பதின்ம வயதுக் கனவு

2 mins read
1aaa369d-4c5f-4122-a5df-5b6d7d8b9ec5
அணிவகுப்பில் கலந்துகாெள்ளும் 53 வயது மல்லிகா பெரியசாமி. - படம்: தற்காப்பு அமைச்சு

உயர்நிலைப் பள்ளி மாணவியாக இருந்தபோது பள்ளியின் ராணுவ இசைக்குழுவில் அங்கம் வகித்த மல்லிகா பெரியசாமி, தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க ஆசைப்பட்டார்.

முடிவில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றபோது, அந்தக் கனவை மறந்து வாழ்க்கையைத் தொடர்ந்தார் மல்லிகா. ஆனால் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கனவு சற்றும் எதிர்பாராத விதத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) மாலை நனவாகப்போகிறது.

‘குட்ஹூட்.எஸ்ஜி’ என்ற அக்கம்பக்க ஒருங்கிணைப்புச் செயலியின் அணிவகுப்புப் படையில் இவர் இடம்பெறுகிறார்.

‘குட்ஹூட்.எஸ்ஜி’ செயலியைப் பதிவிறக்கம் செய்திருந்த மல்லிகா, தேசிய தின அணிவகுப்பில் பங்குபெற அழைக்கும் மின்மடலைச் சில மாதங்களுக்கு முன்னதாகப் பெற்றார். ஆவலுடன் விண்ணப்பித்த மல்லிகா, இம்முறை பங்குபெறத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“சிறு வயதில் பயிற்சி செய்த அணிவகுப்பு நடையை என்னால் இன்றும் செய்ய முடியும் என்பதால் அது எனக்கு இந்த வாய்ப்பைப் பெற உதவி செய்திருந்தது,” என்று இவர் கூறினார்.

தற்போது கழுத்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் திருவாட்டி மல்லிகா, அடிக்கடி கடுமையான வலியை உணர்கிறார். தன்னை ஓய்வெடுக்கும்படி கணவர் கேட்டுக்கொண்டபோதும், அணிவகுப்பில் கலந்துகொள்வதற்கான இந்த வாய்ப்பை நழுவவிடப்போவதில்லை என உறுதிபூண்டார்.

“தேசிய தின அணிவகுப்பு நாள் வரையில் 14 வாரங்களுக்கு ஒத்திகை செய்யவேண்டும். நான் உட்கொள்ளும் மருந்துகள் என் கால்களில் வலியை ஏற்படுத்தும். அத்துடன், அதிக வெப்பம் நிறைந்த சூழலில் ஒத்திகை மேற்கொள்ளவேண்டும்,” என்று இவர் கூறினார்.

கால் வலியைக் குறைக்க ‘நெகடிவ் அயோன்’ காலுறைகளையும் குதிகாலைப் பாதுகாக்கும் சிறப்புக் காலணிகளையும் அணிந்துகொண்டு திருவாட்டி மல்லிகா தமது வலியைச் சமாளித்துக்கொள்கிறார்.

“எனக்கான காலணியை தேசிய தின அணிவகுப்பின் நிர்வாகமே வாங்கிக் கொடுத்தது,” என்றார் இவர்.

வலி எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அணிவகுப்பில் கலந்துகொள்கிறோம் என்ற எண்ணமே தன் மனத்தில் பாலை வார்ப்பதாகக் கூறுகிறார் மல்லிகா.

சிரமங்களைப் பெரிதாக எண்ணாமல் ஒவ்வோர் ஒத்திகைக்காகவும் காத்திருந்ததாகக் கூறிய திருவாட்டி மல்லிகா, அணிவகுப்பில் சக பங்கேற்பாளர்களுக்காகக் கைவினைப் பொருள்களை வாங்குவதாகக் கூறினார்.

“மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும். எனவே நம் வாழ்நாளைக் கொண்டாட்டமாகக் கழிக்கவேண்டும். தேசிய தின அணிவகுப்பின் மூலம் நான் பெறப்போகும் கொண்டாட்ட உணர்வு என் மனத்தில் என்றும் நிலைத்திருக்கும்,” என்கிறார் மல்லிகா பெரியசாமி.

குறிப்புச் சொற்கள்