தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைந்த வருமான குடும்பங்களுக்கான காம்லிங்க் பிளஸ் தொகுப்புத் திட்டம் அறிமுகம்

2 mins read
36cce7c4-0e72-429b-bde2-675e786fda25
குடும்பப் பயிற்றுவிப்பாளராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுர்பி ஷர்மா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைந்த வருமான குடும்பங்களுக்காக காம்லிங்க் பிளஸ் வளர்ச்சித் தொகுப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் நடத்தப்பட்ட ஆறு வார அடித்தளப் பயிற்சித் திட்டத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று, 30 பேர் குடும்பப் பயிற்றுவிப்பாளர் சான்றிதழ்களைப் பெற்றனர்.

காம்லிங்க் பிளஸ் வளர்ச்சித் தொகுப்புத் திட்டத்தில் சேர குறைந்த வருமான குடும்பங்களை இவர்கள் ஊக்குவிப்பர்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முற்படும் குறைந்த வருமான குடும்பங்களுக்கு காம்லிங்க் பிளஸ் வளர்ச்சித் தொகுப்புத் திட்டத்தின்கீழ் நிதிச் சலுகைகள் வழங்கப்படும்.

நான்கு காம்லிங்க் பிளஸ் வளர்ச்சித் தொகுப்புத் திட்டங்களை அமைச்சு 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.

பாலர்க் கல்வி, சொந்த வீடு வாங்குவது, வேலை வாய்ப்பு, கடன் அடைப்பு ஆகியவற்றில் இத்தொகுப்புத் திட்டங்கள் கவனம் செலுத்துகின்றன.

பாலர் பள்ளிகளுக்கான காம்லிங்க் வளர்ச்சித் தொகுப்புத் திட்டம் முதலில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்.

மற்றவை 2024ஆம் ஆண்டிறுதியிலிருந்து படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து, இத்திட்டத்தின்கீழ் இருக்கும் குடும்பங்களின் பிள்ளைகள் மூன்று வயதை அடைவதற்கு முன்பு பாலர் பள்ளியில் சேர்த்துவிடப்பட்டால் அக்குடும்பங்களுக்குச் சலுகைகள் வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாது, அச்சிறுவர்கள் தவறாமல் பாலர் பள்ளிகளுக்குச் சென்று கல்வி பயில்வதை அவர்களது குடும்பங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் அச்சிறுவர்களின் சிறுவர் மேம்பாட்டுக் கணக்கில் ஒருமுறை நிரப்புத் தொகையாக $500 நிரப்பப்படும்.

அச்சிறுவர்கள் மூன்று வயதை எட்டியதும் இத்தொகையைப் பயன்படுத்தி அவர்களது பாலர் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

அத்துடன், மூன்று வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் தவறாமல் பாலர் பள்ளிக்குச் சென்றால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்களது சிறுவர் மேம்பாட்டுக் கணக்கில் $200 நிரப்பப்படும்.

வாழ்க்கையில் மேம்பட விழையும் குறைந்த வருமான குடும்பங்களுக்கு ஏறத்தாழ 200 குடும்பப் பயிற்றுவிப்பாளர்கள் கைகொடுக்கின்றனர்.

அவர்கள் கிட்டத்தட்ட 10,000 குடும்பங்களுக்கு உதவுகின்றனர்.

2024ஆம் ஆண்டிறுதிக்குள் மேலும் 100 குடும்பப் பயற்றுவிப்பாளர்களை நியமிக்க அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.

மிகவும் முக்கியமான, அர்த்தமுள்ள பணியைக் குடும்பப் பயிற்றுவிப்பாளர்கள் செய்வதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தெரிவித்தார்.

காம்லிங்க் பிளஸ் குடும்பப் பயிற்றுவிப்பாளர்களுக்கான சான்றிதழ் அளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

குடும்பப் பயிற்றுவிப்பாளராகப் புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் 32 வயது சுர்பி ஷர்மாவும் ஒருவர்.

“நான் சிறுவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறேன். குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளை மேம்படுத்தினால் தலைமுறை தலைமுறையாக அக்குடும்பங்களை வாட்டி வதைக்கும் வறுமை உட்பட பல்வேறு சவால்களை முடிவுக்குக் கொண்டு வரலாம். இதன்மூலம் சமுதாயம் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன்,” என்று திருவாட்டி சுர்பி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
குடும்பம்பாலர் கல்விசலுகைசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு