மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வரும் குழு ஒன்றுக்கு, ‘பொஃப்மா’ எனப்படும் இணையம்வழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மரண தண்டனைக் கைதிகள் நடத்தப்படுவது தொடர்பாக பொய்யான, தவறாக வழிநடத்தக்கூடிய அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றியதற்காக ‘டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ்’ என்னும் குழுவுக்கு எதிராக அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அந்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொஃப்மா அலுவலகத்தை உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) கேட்டுக்கொண்டார்.
அந்தக் குழு ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது இணையப் பக்கத்திலும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ் ஆகிய சமூகத் தளங்களிலும் வெளியிட்ட கட்டுரை தொடர்பானது அந்தத் திருத்த உத்தரவு.
இதனிடையே, குழு பதிவேற்றிய நான்கு பொய்யான அறிக்கைகளுக்காக பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.
ஆகஸ்ட் 2ஆம் தேதி சிங்கப்பூரர் ஒருவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை, உரிய சட்ட நடைமுறைகளுக்கு இணங்க திட்டமிடப்படவில்லை என்று அந்தக் குழு சொன்னது.
இரண்டாவதாக, அவரைப் போன்ற மரண தண்டனை கைதிகளுக்கு நீதிமன்ற நடைமுறைகளில் சட்ட ஆலோசனை வழங்க மறுக்கப்பட்டதாக மற்றொரு தகவலை அது வெளியிட்டது.
மூன்றாவதாக, திட்டமிடப்பட்ட மரண தண்டனைகள் கடைசி நிமிடத்தில் தன்னிச்சையாக நிறுத்தப்படுகின்றன என்றது அது.
தொடர்புடைய செய்திகள்
கடைசியாக, மரண தண்டனை தொடர்பான சட்டங்களை அரசாங்கம் தன்னிச்சையாக இயற்றுகிறது என்றும் அந்தக் குழு தமது பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது.
இது தொடர்பாகக் கருத்துரைத்த உள்துறை அமைச்சு, “வேண்டுமென்றே பொய்யான தகவல்கள் வெளியிடப்படுவதை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது,” என்றது.
இதற்கு முன்னரும் இதே குழுவுக்கு உள்துறை அமைச்சு திருத்த உத்தரவைப் பிறப்பித்து இருந்தது.

