தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிக்லாப்பில் சாதனை படைத்து தேசிய தினக் கொண்டாட்டம்

2 mins read
6fac71d5-3e37-4c1a-96e6-10dd94d9fc3c
59 கிலோமீட்டர் சைக்கிளோட்டத்தில் பங்கேற்ற பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் (நடுவில்). - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் சாதனைப் பதிவுகளில் இடம்பெற்றுள்ள இரண்டு சாதனைகளை சிக்லாப் குடியிருப்பாளர்கள் முறியடித்துள்ளனர்.

1,100 சிக்லாப் குடியிருப்பாளர்களில் 590 பேர், சமூக ஓவியப் படைப்பு ஒன்றில் ஈடுபட்டு சாதனை படைத்தனர். கற்களில் சாயம் பூசும் நடவடிக்கையில் ஆக அதிகமானோர் பங்கேற்றது, ஒரே இடத்தில் ஆக அதிகமானோர் சாவிக்கொத்துகளைச் செய்து அவற்றுக்கு சாயம் பூசியது ஆகிய சாதனைகளை சிக்லாப் குடியிருப்பாளர்கள் படைத்தனர்.

தேசிய தின கருப்பொருளைக் கொண்ட சாயம் பூசப்பட்ட கற்களும் சாவிக்கொத்துகளும் இணைக்கப்பட்டு ஒரு கலைப் பொருளாக உருவாக்கப்பட்டன. கற்கள், கூடுதல் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைச் சித்திரிக்கின்றன, சாவிக்கொத்துகள், மேம்பட்ட சுகாதாரத்துக்கான ‘கதவைத் திறக்கப்’ பயன்படுத்தப்படும்.

வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 9) தேசிய தினத்தையொட்டி சிக்லாப் வட்டாரத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகளில் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுகாதார மேம்பாட்டு வாரியம், ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டம் ஆகியவை பல்வேறு கூடாரங்களை அமைத்தன. விறுவிறுப்பான உடல்ரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், சிக்லாப் குடியிருப்பாளர்களுக்கென ‘சிக்லாப் ஸெஸ்டி வொர்க்கவுட்’ எனும் சிறப்பு உடற்பயிற்சித் திட்டமும் தொடங்கப்பட்டது. அதோடு, சிங்கப்பூரின் 59வது பிறந்தநாளைக் கொண்டாடும் வண்ணம் 59 பேர் 59 கிலோமீட்டர் தூரம் சைக்கிளோட்டினர்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான முகம்மது மாலிக்கி ஒஸ்மானும் சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டோரில் ஒருவர். டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5.09 மணிக்கு 59 கிலோமீட்டர் சைக்கிளோட்டம் தொடங்கியது.

ஈஸ்ட் கோஸ்ட்டின் பன்முகத்தன்மையும் எல்லா வயது, வாழ்க்கைப் பிரிவுகளையும் சேர்ந்த சிங்கப்பூரர்களின் உடல்நலனில் கவனம் செலுத்துவதுமே இந்த தேசிய தின நடவடிக்கைகளில் சுகாதாரத்தைக் கருப்பொருளாகக் கொண்டதற்குக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

“இந்த (ஈஸ்ட் கோஸ்ட்) சமூகத்திலும் தேசிய அளவிலும் பெரிய கவலையாக இருக்கும் அம்சத்தில் இவ்வாண்டின் தேசிய தின நடவடிக்கைகள் கவனம் செலுத்தின. குடியிருப்பாளர்களிடையே உடல்நலப் பிரச்சினைகள் எற்படுவதைத் தடுப்பது, அவர்களின் மனநலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ‘மேலும் ஆரோக்கியமான ஈஸ்ட் கோஸ்ட்’ (ஹெல்தியர் ஈஸ்ட் கோஸ்ட்) திட்டத்தை ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி அண்மையில் தொடங்கியது. மூப்படையும் சமூகம், நாள்பட்ட நோய்கள் சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகள் அதிகரிப்பது ஆகிய சவால்கள் இருப்பதையொட்டி சமூகத்தின் சிந்தனையில் சுகாதாரத்துக்கு முக்கிய இடம் ஏற்படுத்தித் தருவது எங்கள் எண்ணமாகும்,” என்றார் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான்.

குறிப்புச் சொற்கள்