தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வந்து குவிந்த மக்கள்; வாழ்த்தி விடைபெற்ற வான்மழை

2 mins read
42f3c587-c950-4f2d-9d26-67ff37199a0c
கண்ணில் பட்ட இடமெல்லாம் மக்களாக நிரம்பி இருந்த பாடாங் திடல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அந்திப்பொழுது சாய்ந்து இரவின் கருமை எழுந்த வேளையில், பாடாங் திடலில் கூடியிருந்த மக்கள் வெள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.

மக்கள் ஒவ்வொருவராய் நுழைந்த அதே திடலில் அவர்களைப் போலவே மழையும் தூறலும் ஒன்றன் பின் ஒன்றாய் வந்தன.

ஆயினும் மக்களை வாழ்த்திவிட்டு மழையோடு தூறலும் அங்கிருந்து விடைபெற்றன. குளிர்ந்த பாடாங் திடலில் கூடிய மக்கள் குதூகலத்தில் குதித்தனர். தரை நனைந்தாலும் எந்தத் தடை வந்தாலும் எங்களின் ஒற்றுமைக் கரங்கள் விலகாது என்பதை சிங்கப்பூரர்கள் நிரூபித்தனர்.

தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளைக் காண அங்கு பேராவலுடன் பெருவெள்ளமாய் அவர்கள் திரண்டு இருந்தனர்.

அணிவகுப்புக்கு முன்னதாக, பெரிய பலூன் உருவங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தன. முழுமைத் தற்காப்புக் காட்சியும் மகிழ்ச்சிக்குத் துணைபுரிந்தது.

அடுத்து, ரெட் லயன்ஸ் எனப்படும் சிவப்புச் சிங்க வான்குடை வீரர்கள் ஒவ்வொருவராக பாடாங்கில் வந்திறங்கியபோது மக்கள் துள்ளிக் குதித்து அவர்களை வரவேற்றனர்.

கையொலியும் வாழ்த்தொலியும் ஒருசேரவே அரங்கம் அதிர்ந்தது. அந்த இடமே தேசப் பற்றொலியால் நிரம்பி வழிந்தது.

நாட்டின் கொடியைக் கையில் ஏந்தி, சிவப்பு-வெள்ளை உடையணிந்து, ஒன்றிணைந்த மக்களின் முகத்திலும் அகத்திலும் நாட்டுப் பற்று உணர்வு மேலோங்கி இருந்தது.

அணிவகுப்பைக் காண வந்த ஒவ்வொருவரின் மணிக்கட்டிலும் எல்இடி கைப்பட்டை கட்டி இருந்தார். அணிவகுப்பு ஏற்பாட்டாளர்கள் அதனை வழங்கி இருந்தனர்.

20 மீட்டர் நீள காட்சிக் கப்பல் ஒன்றை சில ஆடவர்கள் இழுந்து வந்தனர்.

அதில் 60களிலும் 70களிலும் இருந்த ஆடவர்கள் இருந்தனர். அந்த உலோகக் கப்பலின் மேல் பகுதி திறந்ததும் தொழிலாளர்கள், கட்டுமான ஊழியர்கள், வெளிநாட்டு சீனப் பெண்கள் ஆகியோர் பாரம்பரிய உடையில் காட்சி அளித்தனர்.

‘ஒன்றாய்... ஒன்றுபட்ட மக்களாய்’ என்னும் இவ்வாண்டின் தேசிய தின கருப்பொருளில் நடைபெற்ற அணிவகுப்பின் காட்சி அரங்கில் அல்லது மூன்றாம் அத்தியாயத்தில் சிங்கப்பூரின் முன்னோடிகளுக்கு நன்றி செலுத்தப்பட்டது.

3,000க்கும் மேற்பட்டவர்கள் வண்ணமய நிகழ்ச்சிகளைப் படைத்து சிங்கப்பூரின் 59வது பிறந்தநாளின் அணிவகுப்புக்கு மெருகூட்டினர்.

நான்காம் அத்தியாயத்தில் 1960களின் ‘பசார் மாலாம்’ எனப்படும் இரவுச் சந்தை எப்படி இருந்தது என்று காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

குறிப்புச் சொற்கள்