கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் என்டியுசி முதல் முறையாக பெரிதளவில் அதன் தேசிய தினக் கொண்டாட்டத்தை நிகழ்த்தியது. இந்த இரு நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ‘சிங்கப்பூர் இளையர்களை கொண்டாடுவோம்’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி நடைபெற்றது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி பிற்பகல் மூன்று மணியளவில் புரொமோன்டரி@மரினா பே வளாகத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் வந்தவண்ணம் இருந்தனர். உள்ளூர் இளம் இசைக் கலைஞர்கள் படைத்த இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்ததோடு உணவுச் சாவடிகளில் வழங்கிய இலவச உணவையும், குளிர்பானங்களையும் பெற்றுக்கொண்டு மக்கள் ஆரவாரத்துடன் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
பிற்பகல் 4.40 மணியளவில் பெருமழை பெய்த போதிலும் மக்களின் கொண்டாட்ட உணர்வு குறையவில்லை. மழை நின்ற பிறகு மீண்டும் தொடர்ந்த இசை நிகழ்ச்சியில் மூழ்கி திளைக்கத் தொடங்கினர்.
கைகளில் சிங்கப்பூர் தேசிய கொடியைப் பிடித்துக்கொண்டு எல்இடி மணிக்கட்டு வார்களை அணிந்தவாறு ஒற்றுமையை அடையாளப்படுத்தும் விதமாக மக்கள், கலைஞர்கள் பாடிய சிங்கப்பூர் தேசிய பாடல்களை மகிழ்ந்து கேட்டனர்.
பாடாங் திடலில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பை நேரடி ஒளிபரப்பு மூலம் பார்ப்பதற்கான வாய்ப்பும் மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு எட்டு மணியளவில் மேகத்தை மிளிர வைத்த வண்ணமயமான வாண வேடிக்கை முத்தாய்ப்பாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து யங் ராஜா, இமான் ஃபாண்டி ஆகிய இசைக் கலைஞர்கள் அவர்களின் பாடல்கள் மூலம் மக்களை இசை மழையில் நனைய வைத்தனர். “தேசிய தினத்தன்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது மிக உற்சாகமான ஒரு அனுபவம். மக்கள் பலர் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வருவது என்னை நெகிழ வைக்கிறது. இது சிங்கப்பூரின் கம்பத்து உணர்வையும் பிரதிபலிக்கிறது,” என்று சிங்கப்பூர் ரேப் இசைக் கலைஞர் யங் ராஜா சொன்னார்.
“நான் 27 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருக்கிறேன். இம்முறை தேசிய தினம் எங்களுக்குச் சிறப்பான ஒன்று. என் மனைவிக்கு சிங்கப்பூர் குடியுரிமை கிடைத்துள்ளது. அதனால் அதை கொண்டாடும் வகையில் நாங்கள் இருவரும் முதல் முறையாக இந்த 27 ஆண்டுகளில் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம். மழை பெய்தாலும் அதை பொருட்படுத்தாமல் கொண்டாட்ட உணர்வில் நாங்கள் இருக்கிறோம்,” என்று கட்டுமானத் துறையில் திட்ட மேலாளராகப் பணியாற்றும் சண்முகானந்தம், 52, கூறினார்.
“மழை பெய்தாலும், வெயில் அதிகமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இந்த நாளில் நாட்டுப்பற்றுடன் இருப்பதுதான் முக்கியம். என் மகள் விரும்பியதால் நாங்கள் பல ஆண்டுகள் கழித்து நிகழ்ச்சியைக் காண வந்துள்ளோம்,” என்று அரசாங்க ஊழியர் நசீரா பேகம், 44, தெரிவித்தார்.