மலர் அலங்காரங்களைச்சேதப்படுத்தியதாக நம்பப்படும் நபரிடம் விசாரணை

2 mins read
b81e7182-9e0c-43f0-96a9-a0d2ce3f53e8
மலர் அலங்காரம் சேதமாக்கப்பட்டதை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. - படங்கள்: ஆயர் ராஜா ஃபிரெண்ட்ஸ் ஃபேஸ்புக்

தேசிய தினத்தை முன்னிட்டு பாண்டான் கார்டன்ஸில் செய்யப்பட்ட மலர் அலங்காரங்களைச் சேதப்படுத்தியதாக நம்பப்படும் 23 வயது ஆடவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மலர் அலங்காரங்களை மாற்றியமைத்து வேறு ஒரு வார்த்தையையும் அவர் உருவாக்கியதாக நம்பப்படுகிறது.

ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 10.45 மணியளவில் புளோக் 404 பாண்டான் கார்டன்சில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் வந்தது.

தேசிய தினத்துக்காகச் செய்யப்பட்ட மலர் அலங்காரம் சேதமடைந்ததாகவும் வேறு வார்த்தையை உருவாக்குவதற்காக மலர்கள் மாற்றி அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் தொடர்பான காணொளி டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டதாகவும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை கூறியது.

ஆகஸ்ட் 6ஆம் தேதி சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் செய்ததாக ஆயர் ராஜா ஃபேஸ்புக் குழு கூறியிருந்தது.

அந்தப் பதிவில், பாண்டான் கார்டன்ஸ் குடியிருப்பாளர் கட்டமைப்பும் குடியிருப்பாளர்களும் சிரமப்பட்டு செய்திருந்த மலர் அலங்காரங்கள் வெறுப்பான செயலால் சேதப்படுத்தப்பட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல்துறை மேற்கொண்ட விரிவான விசாரணையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் அந்த ஆடவர், குறும்புத்தனமாக மலர் அலங்காரங்களை சேதப்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதை காணொளியாகவும் டிக்டாக்கில் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இத்தகைய செயல்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தேசிய உணர்வைக் குறிக்கும் பொது அலங்காரங்கள் அல்லது காட்சிகளைப் சேதப்படுத்த முயற்சி செய்யும் நபர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்று காவல்துறை மேலும் கூறியுள்ளது.

சந்தேக நபர் மீதான குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறிப்புச் சொற்கள்