டாக்கா: பங்ளாதேஷில் மாணவர்கள் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்களுக்குப் பணிந்து ஷேக் ஹசினா பிரதமர் பதவியிலிருந்து விலகி, நாட்டைவிட்டு தப்பியோடிய நிலையில் தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் மீண்டும் சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 10) ஆர்ப்பாட்டங்களில் குதித்தனர்.
பங்ளாதேஷ் நீதிமன்றத்தை சுற்றி வளைத்துள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், குறிப்பாக தலைமை நீதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தை ஆலோசிக்காமல் தலைமை நீதிபதி முழு அளவிலான நீதிமன்றக் கூட்டத்தை கூட்டியதால் மாணவர்கள் ஆத்திரமடைந்தனர்.
நீதிமன்றங்களின் நீதிபதிகள், சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீதிமன்றத்தை சுற்றி பதற்றம் அதிகரித்ததால் நீதிமன்றக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
அப்படியும், உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், தலைமை நீதிபதி அடுத்த ஒரு மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என்று கெடு விதித்தனர். இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர்கள் எச்சரித்தனர்.
இதையடுத்து தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் கொள்கை அளவில் பதவி விலக ஒப்புக் கொண்டார்.
பின்னர், தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பதவி விலகிவிட்டதாக சட்ட அமைச்சின் அடையாளம் தெரிவிக்காத விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிரதமர் ஷேக் ஹசினாவின் விசுவாசியாகப் பார்க்கப்படுகிறார்.
சுதந்திரப் போராட்ட குடும்பங்களுக்கு அரசாங்க வேலைகள் ஒதுக்கப்படுவதற்கு எதிராக எழுந்த போராட்டங்களின் விளைவாக இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக நோபெல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவால் நியமிக்கப்பட்ட உயர் அரசாங்க அதிகாரிகளுக்கு மாணவர்கள் குறி வைத்துள்ளனர்.
பங்ளாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூஃப் தாலுக்தரும் பதவி விலகிவிட்டதாகவும் முக்கியமான பொறுப்பு என்பதால் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் நிதி அமைச்சின் ஆலோசகரான சாலேஹுதின் அகமது செய்தியாளர்களிடம் கூறினார்.
ராய்ட்டர்சால் தாலுக்தரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதற்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக நான்கு வங்கி ஆளுநர்கள் பதவி விலகினர்.
இதற்கிடையே இந்தியாவில் தஞ்சமடைந்த 76 வயது ஷேக் ஹசினா கடந்த திங்கட்கிழமையிலிருந்து அங்கு இருந்து வருகிறார்.
மாணவர்களின் தொடர் போராட்டங்களால் அவரது 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் குறைந்தது 450 பேர் உயிரிழந்தனர்.