சுமார் 30 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்துள்ளார் 63 வயது ரோஸ்மேரி ராசு.
பல தேசிய தினக் கொண்டாட்டங்களைத் தான் கண்டிருந்தாலும் இவ்வாண்டின் தேசிய தினம் இவருக்குத் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
அதற்குக் காரணம், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’சின் ‘ஏடிஇஓ’ இல்லப் பணியாளர்கள் உதவிக்குழு, சோவ்கேர்@ஆர்மேனியன் (பைபிள் ஹவுஸ்) வளாகத்தில் ஏற்பாடு செய்த தேசிய தினக் கொண்டாட்டங்கள்.
600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் பங்கேற்புடன் முதன்முறையாக ‘ஏடிஇஓ’ இவ்வளவு பிரம்மாண்டமான கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. காலை 11 முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்புக் கொண்டாட்டம் நடைபெற்றது.
மியன்மார், இலங்கை, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணிப்பெண்கள் திரண்டனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார் கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங்.
“குழந்தைகள் முதல் வயதான பெற்றோர் வரை நம் குடும்பத்தினரைப் பேணி, உணவு சமைத்து, வீட்டைப் பராமரித்து நம் குடும்பங்களைத் தாங்கும் தூண்களாகத் திகழ்கின்றனர் நம் இல்லப் பணிப்பெண்கள்.
“அவர்களின் அன்பிற்கு இணங்க, நாமும் அவர்களை அன்புடன் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்றார் அமைச்சர் கான். அந்த வகையில் இல்லப் பணிப்பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் சில முக்கிய சட்டதிட்ட மாற்றங்களையும் அவர் நினைவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
ஜனவரி 1, 2023 முதல் இல்லப் பணிப்பெண்களுக்கு மாதந்தோறும் ஓர் ஓய்வுநாள் இருப்பதை மனிதவள அமைச்சு கட்டாயப்படுத்தியுள்ளதை அவர் உதாரணமாக எடுத்துக்காட்டினார்.
பங்காளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியதோடு அனைவரின் முன்னிலையிலும் தேசிய தினத்துக்காகக் கேக் வெட்டும் நிகழ்வையும் அமைச்சர் கான் வழிநடத்தினார்.
“தம் குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து இங்கு வந்திருக்கும் இல்லப் பணிப்பெண்களின் தியாகங்களை நாம் பாராட்டுகிறோம்,” என்றார் ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ் தலைவரான தவத்திரு எசெக்கியல் டான்.
சுவாரசிய அங்கங்கள்
காலையில் இளம் தொண்டூழியர்கள் ஸும்பா நடனத்தை வழிநடத்தினர்.
தம் பாரம்பரியக் கூறுகளை விளக்கும் நடனங்களை நேப்பாளம், இந்தோனீசியா, பிலிப்பீன்சைச் சேர்ந்த பணிப்பெண்கள் படைத்தனர்.
மேடையிலும் வளாகத்திலும் பல சுவாரசியமான விளையாட்டுகள் இடம்பெற்றன. சுடச்சுட சமைக்கப்பட்ட சிற்றுண்டிகளைப் பணிப்பெண்கள் உண்டு மகிழ்ந்தனர்.
மலிவான விலையில் வீட்டுப் பொருள்கள், ஆடை அணிகலன்களும் விற்கப்பட்டன.
காவல்துறை, மனிதவள அமைச்சு, பல சமூகப் பங்காளிகள் சாவடிகள் வைத்திருந்தன.