மரண தண்டனையை எதிர்க்கும் ஆர்வலர் குழுவுக்கு எதிராக ஒரு வார காலத்திற்குள் இரண்டாம் முறையாக, ‘பொஃப்மா’ எனப்படும் இணையம்வழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
‘டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ்’ (டிஜேசி) என்னும் அந்தக் குழு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் வெளியிட்ட பதிவுகளுக்கு எதிராக அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) கூறியது.
ஆகஸ்ட் 2ஆம் தேதியும் ஆகஸ்ட் 7ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்ட இரு சிங்கப்பூரர்களின் மரண தண்டனை, ‘உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் செயல்படுத்தப்பட்டதாகவும்’ ‘மக்கள் வாழ்வதா, இறப்பதா என்பதைத் தன்னிச்சையாகத் தீர்மானிக்க மரண தண்டனையை அரசாங்கம் பயன்படுத்துவதாகவும்’ பொய்யான பதிவுகள் வெளியிடப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
உண்மையை சோதித்து அறியும் ‘ஃபேக்சுவலி’ (Factually) என்னும் அரசாங்க இணையத்தளம், அந்த இரண்டு பதிவுகளும் எந்த வகையில் பொய்யானவை என்பதை விளக்கியுள்ளது.
இதற்கிடையே, டிஜேசி குழு, தேவையான திருத்த அறிவிப்புகளை தனது மூன்று சமூக ஊடகத் தளங்களிலும் இடம்பெறச் செய்துள்ளது.
இதற்கு முன்னர், கடந்த வாரத் தொடக்கத்திலும் அந்தக் குழுவுக்கு எதிராக பொஃப்மா திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மரண தண்டனைக் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்த அதன் சமூக ஊடகத்தள உள்ளடக்கங்களுக்கு எதிராக அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அந்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொஃப்மா அலுவலகத்தை உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 2ஆம் தேதி சிங்கப்பூரர் ஒருவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை, உரிய சட்ட நடைமுறைகளுக்கு இணங்க திட்டமிடப்படவில்லை என்று அந்தக் குழு சொன்னது.
இரண்டாவதாக, அவரைப் போன்ற மரண தண்டனை கைதிகளுக்கு நீதிமன்ற நடைமுறைகளில் சட்ட ஆலோசனை வழங்க மறுக்கப்பட்டதாக மற்றொரு தகவலை அது வெளியிட்டது.
மூன்றாவதாக, திட்டமிடப்பட்ட மரண தண்டனைகள் கடைசி நிமிடத்தில் தன்னிச்சையாக நிறுத்தப்படுகின்றன என்றது அது.
கடைசியாக, மரண தண்டனை தொடர்பான சட்டங்களை அரசாங்கம் தன்னிச்சையாக இயற்றுகிறது என்றும் அந்தக் குழு தமது பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது.
இது தொடர்பாகக் கடந்த வாரம் கருத்துரைத்த உள்துறை அமைச்சு, “வேண்டுமென்றே பொய்யான தகவல்கள் வெளியிடப்படுவதை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது,” என்றது.

