தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்தானாவில் தேசிய தின ஒன்றுகூடல்

2 mins read
d9e48a50-182f-428d-9922-03dd649f5ddc
தங்கள் துணைவியாருடன் (இடமிருந்து) மூத்த அமைச்சர் லீ சியன் லூங், அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங், ஓய்வுபெற்ற கெளரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோர் சிங்கப்பூருக்கு 59ஆவது பிறந்தநாள் வாழ்த்து கூறும் பெரிய கேக்கை வெட்டினார்கள். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் 59ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, திரு தர்மன் சண்முகரத்னம் அதிபராகப் பொறுப்பேற்றபிறகு முதன்முதலாக அதிபர் மாளிகையில் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 12) தேசிய தின ஒன்றுகூடல் விருந்து நடைபெற்றது.

கிட்டத்தட்ட 850 பேர் பங்கேற்ற இந்த விருந்தில் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங், ஓய்வுபெற்ற கெளரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் தத்தம் துணைவியாருடன் கலந்துகொண்டனர்.

அறுசுவை உணவு, நேரடி இசையுடன் சூழ அமைச்சர்கள், சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள், சுகாதாரப் பங்காளிகள், தேசிய விளையாட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் ஒருவரோடு ஒருவர் உறவாடி மகிழ்ந்தனர்.

இரவு 8 மணி அளவில் நிகழ்ச்சிக் கூடாரத்திற்குத் தம் துணைவியார் ஜேன் இத்தோகியுடன் வந்திருந்த அதிபர் தர்மன் முன்னிலையில், உள்ளூர்க் கலைஞர் பெஞ்சமின் கெங் ‘நாட் அலோன்’ (Not Alone) என்ற இவ்வாண்டின் தேசிய தினப் பாடலைப் பாடினார்.

அதன் பிறகு அதிபர், பிரதமர், மூத்த அமைச்சர், ஓய்வுபெற்ற கெளரவ மூத்த அமைச்சர் என நால்வரும் தேசிய தின கேக்கை வெட்டி சிங்கப்பூருக்கான பிறந்தநாள் பாடலை விருந்தினர்களுடன் சேர்ந்து பாடினர்.

நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டோரில் ஒருவரான மருத்துவரும் சமூக ஆர்வலருமான டாக்டர் ஹமீத் ரசாக், “எல்லா நிலைகளிலிருந்தும் சமூகத்திற்குச் சிறந்த முறையில் பங்களிப்போர் இங்கு ஒன்றுகூடுவதைக் காணும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,” என்றார்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான அங் மோ கியோ செங்சான்-சிலேத்தார் அடித்தள உறுப்பினர்  மாணிக்கப்பட்டர் உலகப்பன், 47, “2017ல் நான் இங்கு வந்திருந்தேன். திரு தர்மன் அதிபராகப் பதவியேற்ற பின்னர் இங்கு மீண்டும் வந்தது குறித்து மகிழ்கிறேன்,” என்றார்.

முதன்முறையாக இந்த ஒன்றுகூடலுக்காக அழைக்கப்பட்ட சன்லவ் இல்லத்தின் திட்டத் தலைவர் கே.ராஜமோகன், புதிய தலைவர்களையும் சமூகத் தொண்டர்களையும் கண்டு மகிழ்வதாகக் கூறினார்.

“எங்களது சேவையை அதிபர் பாராட்டுகிறார் என்பதை உணர்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இஸ்தானாவிற்கு முதன்முறையாக வந்துள்ள மனிதவள நிர்வாகியும் பொங்கோல்-ஷோர் இந்திய நற்பணிச் செயற்குழுவின் துணைத் தலைவருமான கெளரி சுப்ரமணியம், 45, “புதியவர்கள் பலருடன் பேசி தொடர்புகளை உருவாக்குகிறேன். எனக்கு இங்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்