சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் அடுத்த ஆண்டில் மேலும் பல நகரங்களுக்குப் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் கூடுதலாக சில நகரங்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவையைத் தொடங்க உள்ளது.
2025 மார்ச் 30 முதல் அக்டோபர் 25 வரை கூடுதல் பயணிகளுடன் அதிக விமானங்களை இயக்க இருப்பதாக அந்த நிறுவனம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்தது.
விமானப் பயணங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்த நகரங்களை அது தனது பட்டியலில் சேர்த்து உள்ளது.
தற்போது லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு வாரம் ஐந்து விமானச் சேவைகள் இயக்கப்படுகின்றன.
அடுத்த ஆண்டு முதல் வாரத்தின் ஏழு நாள்களும் அந்த நகரத்துக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவைகளை நடத்தும்.
அந்த விமான நிலையத்திற்கான தற்போதைய ஐந்து விமானச் சேவைகளுடன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு நான்கு சேவைகளை அது நடத்தும்.
இத்தாலியத் தலைநகர் ரோமுக்கு தற்போது வாரம் நான்கு விமானச் சேவைகள் என்பது 2025 ஜூன் 24 முதல் செப்டம்பர் 7 வரை ஐந்து சேவைகளாக அதிகரிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்-மிலான்-பார்சிலோனா இடையில் தற்போது நடத்தப்படும் வாரம் மூன்று சேவைகள் 2025 ஜூன் 24 முதல் செப்டம்பர் 7 வரை நிறுத்தி வைக்கப்படும்.
அதற்குப் பதிலாக, சிங்கப்பூருக்கும் அந்த இரண்டு ஐரோப்பிய நகரங்களுக்கும் இடையில் அதிகமான நேரடி விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

