சாலையில் குழு அளவை மீறியதற்காக 32 சைக்கிளோட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகப் போக்குவரத்து காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இவ்வாண்டு ஜூலை 28ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின்போது இந்த சைக்கிளோட்டிகள் பிடிபட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அமலாக்க நடவடிக்கைகளின்போது, சைக்கிளோட்டும்போது பின்பற்றவேண்டிய விதிகள் குறித்தும் வழிகாட்டுதல்கள் குறித்தும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது.
குழு அளவு விதியை மீறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சைக்கிளோட்டிகளுக்கு $150 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தங்கள் பாதுகாப்பிற்கான விதிகளையும் வழிகாட்டுதல்களையும் சரியாகப் பின்பற்றுமாறும் சாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் காவல்துறை சைக்கிளோட்டிகளுக்கு நினைவூட்டியது.
போக்குவரத்துச் சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் செல்லும் மிதிவண்டி ஓட்டிகள், விரைவுச்சாலைகளில் மிதிவண்டி ஓட்டுபவர்கள், ஒற்றைத் தடச் சாலையில் இருவர் இருவராகச் செல்லும் மிதிவண்டி ஓட்டிகள், பேருந்துத் தடத்தில் பேருந்துகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் நேரத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.