தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திறந்தவெளி பேருந்தில் உள்ளூர் ஒலிம்பிக் வீரர்கள் கொண்டாட்ட ஊர்வலம்

3 mins read
8c2806b2-f1ce-43dd-b883-fb3daba621ae
திறந்தவெளி பேருந்தில் ஊர்வலம் சென்ற சிங்கப்பூர் ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகளைக் பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்த சிங்கப்பூரர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மையில் பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்கினர்.

அவர்களில் ஒருவரான 17 வயது மேக்சிமிலியன் மெய்டர் ஆண்களுக்கான அலையாடல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

சிங்கப்பூருக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஆக இளைய வீரர் எனும் பெருமை இவரைச் சேரும்.

இந்நிலையில், நாடு திரும்பிய உள்ளூர் ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகளில் பத்து பேர் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று திறந்தவெளி பேருந்தில் ஊர்வலம் சென்றனர்.

அவர்களைக் கௌரவிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

திறந்தவெளி பேருந்தில் இருந்த வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோரைப் பார்த்து சாலை நெடுகிலும் மக்கள் ஆரவாரம் செய்து, கரவொலி எழுப்பி, கைப்பேசிகளைப் பயன்படுத்தி படங்கள் எடுத்துக்கொண்டனர்.

மக்கள் தந்த பேராதரவைப் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் வீரர்கள், வீராங்கனைகள் முகமெல்லாம் சிரிப்புடன் அவர்களைப் பார்த்து கை அசைத்தனர்.

சிவப்பு நிற திறந்தவெளிப் பேருந்து, அந்தப் பத்து வீரர்கள், வீராங்கனைகளையும் ஏந்திக்கொண்டு காலை சுமார் 11.30 மணி அளவில் காலாங்கில் உள்ள சிங்கப்பூர் விளையாட்டு மையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

பேஃபிரண்ட் அவென்யூ, சைனாடவுன், ஆர்ச்சர்ட் சாலை, சிராங்கூன் சாலை, விக்டோரியா சாலை வழியாகப் பேருந்து ஊர்வலம் சென்றது.

பேருந்தில் மெக்சிமிலியன் மெய்டருடன், பூப்பந்து வீரர்கள் இயோ ஜியா மின், டெரி ஹீ, ஜெசிக்கா டான், நீச்சல் வீரர்கள் கான் சிங் ஹுவீ, படகு வலித்தல் வீரங்கனை ஸ்டெஃபனி சென், படகோட்ட வீரர் ராயன் லோ, ஓட்டப் பந்தய வீரர் மார்க் லுயிஸ், மேசைப் பந்து வீரர்கள் ஐசேக் குவேக், சோ ஜிங்யி ஆகியோரும் இருந்தனர்.

திறந்தவெளி பேருந்தில் ஊர்வலம் சென்ற வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோரைக் காண சிராங்கூன் சாலையில் உள்ள தேக்கா சந்தைக்கு வெளியே ஆதரவாளர்கள், ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பின் தொண்டூழியர்கள் எனப் பலர் திரண்டனர்.

சுமார் 1.50 மணி அளவில் பேருந்து விளையாட்டு மையத்துக்குத் திரும்பியது.

“நாங்கள் ஊர்வலம் செல்வதைப் பார்க்க பலர் திரண்டதைப் பார்த்து மனம் நெகிழ்ந்தேன். அவர்கள் ஆரவாரம் செய்து, எங்களை வாழ்த்தும் வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்திக்கொண்டிருந்தனர். இத்தகைய ஒரு அமோக வரவேற்பு எங்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை,” என்று மெக்சிமிலியன் மெய்டர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

“இன்று நமது ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோரைக் கௌரவிக்கிறோம். ஒலிம்பிக் போட்டியில் அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். அவர்களது திறனை, சிறப்பான செயல்பாட்டை அங்கீகரித்து அவர்களுக்கு நன்றி சொல்ல இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த வீரர்கள், வீராங்கனைகள் சிங்கப்பூரர்களைப் பெருமை அடையச் செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த ஊர்வலம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது,” என்று கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார்.

“நமது நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பள்ளிக் காற்பந்துப் போட்டிக்கு ஆதரவளிப்பதற்காக விளையாட்டு மையத்துக்குச் சென்றபோது மேக்ஸ்மிலியனைத் தற்செயலாகப் பார்த்தோம். மேக்ஸ்மிலியனைப் பார்த்ததில் மகிழ்ச்சி,” என்றார் செயிண்ட் ஜோசஃப்ஸ் கல்விக் கழக மாணவரான 14 வயது முருகப்பன் சபரீஷ் சரவணன்.

“மேக்ஸ்தான் என்னுடைய முன்னுதாரணம். நான் நியூ ஜெர்சியில் படகோட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மேக்ஸ்மிலியனை நேரில் கண்டு வாழ்த்து தெரிவித்தேன்,” என்று விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூரில் இருக்கும் தமது நண்பர்களைக் காணவந்துள்ள 18 வயது விக்ரம் சுல்லிபரம்பில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்