குத்தகைக் காலத்தின் ஒரு பகுதியைத் திருப்பித் தரும் திட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான குடும்பங்கள் $100,000 முதல் $300,000 வரை பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது.
இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதிவரை இந்தத் திட்டத்தில் பங்கேற்ற 12,656 குடும்பங்களில் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் மேற்கூறியவாறு பயன் பெற்றுள்ளன என்று புதன்கிழமை (ஆகஸ்ட் 14ஆம் தேதி) அன்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்தது.
ஆண்டுதோறும் இந்தத் திட்டத்தில் பங்குபெறும் குடும்பங்களின் எண்ணிக்கை சீராக இருப்பதாக கழகம் தெரிவித்தது. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 1,680 குடும்பங்கள் பங்குபெற்று வந்துள்ளன என்றும் கழகம் கூறியது.
இந்தத் திட்டம் 2009ஆம் ஆண்டு அறிமுகமானது. இதன்படி, 65 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையோர் தங்கள் ஓய்வுக்கால நிதி சேமிப்புக்கு தங்கள் வீடுகளின் குத்தகைக் காலத்தின் ஒரு பகுதியை கழகத்துக்கு திருப்பித் தர வழிசெய்கிறது.
இதில் கிடைக்கப் பெறும் பணம் இவர்களின் மத்திய சேம நிதி ஓய்வுக்கால கணக்கில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் வழங்கீட்டுத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்படும். இதில் ஓய்வுக்கால கணக்கில் சேர்க்கப்பட்ட பணம் தவிர மீதமிருக்கும் பணம் வீட்டு உரிமையாளர்களுக்கு ரொக்கமாக வழங்கப்படும்.
மத்திய சேம நிதி ஒய்வுக்கால கணக்கில் நிரப்பப்படும் பணத்தின் அளவைப் பொறுத்து வீட்டு உரிமையாளர்களுக்கு $7,500 முதல் $30,000 வரை கூடுதல் தொகை ரொக்க போனசாக வழங்கப்படும் என்று வீவக விளக்கியது.
இந்தத் திட்டத்தின்கீழ் வீட்டின் ஆக குறைந்த வயதுடைய குத்தகைக்காரருக்கு 95 வயது ஆகும் காலம் வரை வீட்டு குத்தகையை வைத்துக்கொண்டு மீதமுள்ள குத்தகைக் காலத்தை கழகத்திடம் திருப்பிக் கொடுக்கலாம் என்று கழகம் தெளிவுபடுத்தியது.
இந்தத் திட்டத்தில் பங்கு பெற்றவர்களில் 33 விழுக்காட்டினர் நான்கு அறை வீட்டு உரிமையாளர்கள், 14 விழுக்காட்டினர் ஐந்து அறை, அல்லது அதற்கும் பெரிய வீடுகளில் வசிப்பவர்கள் என்றும் கழகம் கூறுகிறது.