பொய்க் கணக்கு காட்டிய குற்றத்திற்காக வர்த்தகர் டேவிட் யோங் மீது நான்காவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னர், ‘சூப்பர் ரிச் இன் கொரியா’ என்னும் ‘நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி தளத் தொடரில் 37 வயது டேவிட் யோங் தோன்றினார்.
எவர்கிரீன் குரூப் ஹோல்டிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான அவரது முழுப் பெயர் யோங் கங் லின்.
குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக அவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) காணொளி வாயிலாகப் பங்கேற்றார். அப்போது அவருக்கு $1 பில்லியன் பிணை அனுமதிக்கப்பட்டது.
எவர்கிரீன் குரூப் ஹோல்டிங்ஸ் (எவர்கிரீன் ஜிஎச்) இதற்கு முன்னர் எவர்கிரீன் அசட்ஸ் மேனேஜ்மென்ட் என்னும் பெயரில் இயங்கியது.
புதிய பெயரில் இயங்கும் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆவணங்களில் பொய்த் தகவல்களைச் சேர்த்ததாக அவர் மீது இம்மாதத் தொடக்கத்தில் இருந்து ஏற்கெனவே மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஜோலீன் லோவ் மொங் ஹான் என்று அடையாளம் காணப்பட்ட தமது பெண் ஊழியரை அவர், மோசடி செய்யும் நோக்குடன், எவர்கிரீன் ஜிஎச் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆவணங்களில் போலித் தகவல்களைச் சேர்க்க வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
எவர்கிரீன் ஜிஎச், எவர்கிரீன் ஹோல்டிங்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒன்றாகும்.
தொடர்புடைய செய்திகள்
2021 டிசம்பர் 16ஆம் தேதி, மேலும் இரு வரிக் கட்டண ஆவணங்களில் போலித் தகவல்களைச் சேர்க்க வைத்த அந்தப் பெண்ணைத் தூண்டியதாகக் கடந்த வாரம் (ஆகஸ்ட் 8) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த ஆவணங்கள், இரு வேறு தரப்பினருக்கு அறைகலன்களை விற்பதன் தொடர்பில் தயார்செய்யப்பட்டவை என்று நம்பப்படுகிறது.
போலிக் கணக்குகள் தயாரித்த குற்றச்சாட்டின் தொடர்பில் ஆகஸ்ட் 1 கைதுசெய்யப்பட்ட யோங், மத்திய காவல்துறைப் பிரிவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

