நள்ளிரவில் தீ மூண்ட வீட்டில், புகையில் சிக்கியிருந்த குடியிருப்பாளர் ஒருவரை தீயணைப்பாளர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.
இதற்காக கதவை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர்.
ஹவ்காங் அவென்யூ 5, புளோக் 313ல் உள்ள வீட்டில் தீ மூண்டது குறித்து நள்ளிரவுக்குப் பின் 12.50 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து செயலில் இறங்கியதாக ஃபேஸ்புக் பதிவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயணைப்பாளர்கள் வீட்டை அடைந்தபோது இரண்டாவது மாடியில் இருந்த வரவேற்பு அறையில் தீ மூண்டிருப்பதையும் ஒருவர் அங்கு சிக்கியிருப்பதையும் கண்டறிந்தனர்.
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த தீயணைப்பாளர்கள், சமையல் அறையில் இருந்த குடியிருப்பாளரைப் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
உடனே தீயை அணைக்கும் பணி தொடங்கப்பட்டது. தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலும் மற்றொருவர் சாங்கி பொது மருத்துமனையிலும் சேர்க்கப்பட்டனர் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கம்பக்கத்தில் வசிக்கும் சுமார் 30 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தீயினால் வரவேற்பு அறை முற்றிலும் சேதமடைந்துவிட்டது என்றும் எஞ்சிய அறைகள் கடுமையான வெப்பத்தால் சேதமடைந்தன என்றும் அது கூறியது.
ஆரம்பக் கட்ட விசாரணையில் தனிநபர் நடமாட்டச் சாதனத்திலிருந்து தீ மூண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருந்தாலும் தீ மூண்டதற்கான உண்மையான காரணத்தை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மின்கலன்களுக்கு மின்னூட்டம் செய்ய வேண்டாம் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீண்டும் ஆலோசனை வழங்கியுள்ளது.
இரவு முழுவதும் கவனிக்காமல் மின்னூட்டம் செய்வதும், போலி மின்கலன்களைப் பயன்படுத்துவதும் ஆபத்து என்றும் தெரிவிக்கப்பட்டது.