பைட்டான்ஸ் நச்சுணவுச் சம்பவம்; உணவகத்துக்குத் தடை விலகியது

பைட்டான்ஸ் நச்சுணவுச் சம்பவம்; உணவகத்துக்குத் தடை விலகியது

படம்: யூன் ஹாய் யாவ்

16 Aug 2024 - 5:38 pm

2 mins read

நச்சு உணவால் பைட்டான்ஸ் அலுவலகமே அல்லோலகல்லோலப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய யூன் ஹாய் யாவ் உணவகத்துக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 30ஆம் தேதி நச்சு உணவால் பைட்டான்ஸ் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

நார்த் பாயிண்டில் செயல்படும் யூன் ஹாய் யாவ் உணவகம், தேவையான உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எண் 1 நார்த்பாயிண்ட் டிரைவில் உள்ள யூன் ஹாய் யாவ் மீண்டும் செயல்பட பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அன்று தெரிவித்தது.

யூன் ஹாய் யாவ், சீனாவில் செயல்படும் உணவகத்தின் கிளையாகும். யூன் நான்ஸ் என்று அது சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

எண் 2 செனோக்கோ சவுத் ரோட்டில் உள்ள பூ டியன் சர்வீசஸ் என்ற உணவு விநியோகிப்பு நிறுவனத்துடன் சேர்த்து யூன் ஹாய் யாவ் உணவகத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

பூ டியன் சர்வீசசுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதியே தடை விலக்கப்பட்டது.

ஜூலை 31ஆம் தேதியிலிருந்து அந்தத் தடை அமலில் இருந்தது.

ஒன் ராஃபிள்ஸ் கீயில் உள்ள பைட்டான்ஸ் அலுவலகத்திற்கு ஜூலை 30ஆம் தேதி அந்த இரண்டு உணவகங்கள் விநியோகித்த உணவால் ஏறக்குறைய 169 ஊழியர்கள் இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டனர்.

நச்சு உணவால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட 17 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் உணவு நிலையம் தெரிவித்தது.

தடை அமலில் இருந்த காலகட்டத்தில் யூன் ஹாய் யாவ், உடனடியாக சாப்பிடும் உணவு, உருகிய, அழுகக்கூடிய உணவுப் பொருள்கள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்தது. உணவகத்தையும் சமையல் பாத்திரங்களையும் தூய்மையாக்கி உணவு தயாரிக்கும் இடங்கள், மேசைகள், தரைகளை கிருமி நீக்கிகளைக் கொண்டு சுத்தம் செய்தது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்