பூட்டானில் உள்ள 230க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக் குறைபாடுகளுக்காக இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதற்கு, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட லாப நோக்கற்ற அமைப்பான ஸ்மைல் ஏஷியாவுக்கும் பூட்டான் அரசியார் தொடங்கிய டரயானா அறக்கட்டளைக்கும் இடையிலான ஒத்துழைப்பு முக்கிய காரணமாக இருந்தது.
இதன் பின்னணியில் பூட்டான் அரசியார் டோர்ஜி வங்மோ வங்சுக் தீவிரமாகச் செயல்பட்டார்.
அவருக்கு சிங்கப்பூரில் ‘ஸ்மைல் ஏஷியா’ கொடை நோக்கு (Smile Asia Philanthropic Visionary Award) என்ற அறிமுக விருது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) வழங்கப்பட்டது. வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் விருதை வழங்கி அவரை கௌரவப்படுத்தினார்.
டரயானா, ஸ்மைல் ஏஷியா ஆகிய இரு அறப்பணி அமைப்புகளும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பிளவுபட்ட உதடு, அண்ணம் போன்ற குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இதன்கீழ் 2013 முதல் 2019 வரை சிங்கப்பூர் தொண்டூழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பூட்டானுக்கான மருத்துவக் குழுவினர் சுமார் 231 குழந்தைகளுக்கு முகக் குறைபாடுகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு பேசிய பூட்டான் அரசியார், ஸ்மைல் ஏஷியா ஏற்பாடு செய்த அறுவை சிகிச்சையால், சுகாதாரப் பராமரிப்பைப் பெறுவதற்கு சிரமமாக உள்ள பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளை பாரபட்சம், தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து தடுக்கலாம் என்று கூறினார்.
“தொண்டூழியம் செய்த மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, உங்களுடைய விலைமதிப்பற்ற நிதியுதவியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஒரு காலத்தில் எண்ணிப் பார்க்க முடியாத வகையில் முகத்தை ஒழுங்குபடுத்தும் அதிசயம் உண்மையாகிவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் மேரியட் டேங் பிளாசா ஹோட்டலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற ஸ்மைல் ஏஷியா அறப்பணி நிகழ்ச்சியில் அரசியார் டோர்ஜி வங்மோ வங்சுக் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.