நான்கு ஆண்டுகளாக சிறார்களைப் பாலியல் செயல்களில் ஈடுபடுத்தும் 750க்கும் மேற்பட்ட ஆபாசக் காணொளிகளைப் பதிவிறக்கம் செய்த நபருக்கு 21 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 16) சிறார்களை துன்புறுத்தும் ஆபாசக் காணொளிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளை லியவ் யி ஃபிய், 31, ஒப்புக்கொண்டார். அவற்றில் ஒரு காணொளி, குழந்தை, விலங்கு சம்பந்தப்பட்டதாகும் என்று அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் ஷெல்டன் லிம் தெரிவித்தார்.
2017 அல்லது 2018ஆம் ஆண்டில் குற்றச்செயல்புரிந்த சமயத்தில் லியவ், சூதாட்ட விற்பனையாளராக இருந்தார். சிறார் பாலியல் தொடர்பான காணொளிகளைக் கொண்ட இணையத்தளத்தின் இணைப்பு வழியாக ஆபாசப் படங்களைப் பார்த்து அவர் ரசித்து வந்துள்ளார்.
“குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறார்களின் காணொளிகளைப் பார்க்கும் விருப்பத்தை வளர்த்துக் கொண்டார். பின்னர், குறிப்பாக, சிறார் தொடர்பான ஆபாசக் காணொளிகளை இணையத்தில் தேடி விரும்பியவற்றை பிறகு பார்ப்பதற்காக அவர் பதிவிறக்கம் செய்திருந்தார்,” என்று அரசாங்க வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அக்டோபர் 2021ல் ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தஞ்சோங் காத்தோங்கில் உள்ள லியவின் வீட்டை காவலர்கள் சோதனையிட்டு அவரைக் கைது செய்தனர்.
அவரது மடிக்கணினி, இரண்டு கைப்பேசி உள்ளிட்டவற்றில் மொத்தம் 752 ஆபாசக் காணொளிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.