நொவீனா குளோபல் ஹெல்த்கேர் குருப் நிறுவனத்தின் இணை நிறுவனர் நெல்சன் லோ.
இவர் வங்கிகளை ஏமாற்றி தனது நிறுவனத்துக்கு $69 மில்லியனைக் கடனாகக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16ஆம் தேதி) அன்று 15 ஆண்டு, ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நெல்சன் லோ நி-லூன், 45, மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவற்றில் நான்கு ஏமாற்றுதல், மூன்று கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், இரண்டு போலி ஆவணங்களைத் தயாரித்தல் ஆகியன. அவர்மீது மொத்தம் 60 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
நெல்சன் லோ 2020ஆம் ஆண்டு மற்ற இரு முதலீட்டாளர்களுடன் சேர்ந்து இங்கிலாந்தின் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான நியூகாசல் யுனைடெட்டை வாங்க முற்பட்டபோது பிரபலமானார். பிரிட்டிஷ் பவுண்ட் 280 மில்லியனுக்கு (S$477 மில்லியன்) நியூகாசல் குழுவை வாங்க மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.
இவரது ஊழியரும் பள்ளி நண்பருமான வோங் சூன் யு, 45, ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16ஆம் தேதி) அன்று ஏமாற்றுதல், போலி ஆவணங்களைத் தயாரித்தல் ஆகியவற்றுக்காக எட்டு ஆண்டு, ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.