தூய குடிநீர் வழங்குவதில் சிங்கப்பூர் முதலிடம்

தூய குடிநீர் வழங்குவதில் சிங்கப்பூர் முதலிடம்

2 mins read
d4825bf4-2647-49ca-9197-6e84c4032d7d
தூய குடிநீர் வழங்குவதில் பிரிட்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியது சிங்கப்பூர்.   - படம்: பிக்சாபே

உலகிலேயே தூய குடிநீரை வழங்குவதில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருப்பதாக யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலைக்கழகம் தனது 2024ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குறியீடு (இபிஐ) ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உடல்நலப் பாதிப்பு சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில் சுகாதாரம், நீரின் தரம் தொடர்பாக 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்தியது.

“சிங்கப்பூரில் அனைவருக்கும் சுகாதாரமான உடல்நலச் சூழல் இருப்பதுடன், கழிவுநீரைச் சுத்திகரித்து மறுபயனீட்டுக்கு விடுவதில் உலகில் முன்னோடி நாடாகவும் விளங்குகிறது. கழிவுநீர் மறுசுழற்சியை தனது சமூகப் பொருளியல் மேம்பாடு, நீர்ப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் சிங்கப்பூர் இணைத்துள்ளது,” என்று யேல் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நாடுகளின் நீர், உடல்நலச் சூழல் ஆகியவற்றுடன் தொடர்புடைய சுகாதார அச்சுறுத்தல்களை கணித சூத்திரம் ஒன்றின் மூலம் கணக்கிட்டு அதில் வரும் மதிப்பெண்களைக் கொண்டு அவை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஓர் ஆண்டு முழுவதும் சுகாதாரம் எவ்வளவு பாதிப்படைகிறது என்பதை அந்த சூத்திரம் கணக்கிடும்.

100 மதிப்பெண்களைப் பெறும் நாடுகள், சுகாதாரத்தில் ஆகக் குறைவான பாதிப்பை எதிர்நோக்குபவையாகும். பூஜ்ஜியத்தைப் பெறும் நாடுகள் அதற்கு நேர்மாறான நிலையில் இருப்பவை.

அந்த வகையில் இபிஐ குறியீட்டில் சிங்கப்பூர் 99.9 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் இத்தாலி (98.2 மதிப்பெண்கள்), பிரிட்டன் (98.2 மதிப்பெண்கள்) ஆகிய இரு நாடுகள் இடம்பெற்றன.

அவற்றுக்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்தும் (98.0) ஜெர்மனியும் (97.9) வந்தன.

ஆகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற பெரும்பாலான நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை. மடகாஸ்கார் (12.9 மதிப்பெண்கள்), நைஜர் (12.2 மதிப்பெண்கள்), லெசோத்தோ (9.4 மதிப்பெண்கள்), மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (8.9 மதிப்பெண்கள்), சாட் (4.3 மதிப்பெண்கள்) ஆகியவை அவற்றில் அடங்கும்.

சுகாதார மற்றும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளுக்காக ஒரு குடும்பம் பயன்படுத்தும் நீரின் தரம், அது எவ்வளவு எளிதில் கிடைக்கிறது போன்றவற்றைக் கொண்டு நீர் எவ்வளவு சுத்தமானது என்பது நிர்ணயிக்கப்படுவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்