தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூர் மக்களில் உதவி தேவைப்படும் அனைவருக்கும், வேறுபாடுகளின்றி சட்ட உதவி கிடைக்கவேண்டும் என்பது ‘புரோ போனோ எஸ்ஜி’ இலவச சட்ட உதவி அமைப்பின் இலக்கு

அனைவருக்கும் சட்ட உதவிகிடைக்கப் பாடுபடும் பிரேம்நாத்

2 mins read
480a200e-b38a-451c-809d-5d67ba8774cc
இலவச சட்ட சேவையில் மேலும் பல இளையர்களை ஈடுபடுத்துவது பிரேம்நாத் விஜயகுமாரின் நோக்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சட்டப் பிரதிநிதித்துவம் மூலம் சிங்கப்பூரில் நாடு கடந்து வாழும் குடும்பங்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதில் ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பு அண்மையில் கவனம் செலுத்தி வருகிறது.

வெவ்வேறு நாட்டுக் குடியுரிமையை வைத்திருக்கும் குறைந்த வருமானத் தம்பதிகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் கல்வி, மருத்துவச் செலவுகள் கட்டுப்படியாகக்கூடிய நிலையில் இல்லாமல் இருக்கக்கூடும். அல்லது, அத்தகைய குடும்பங்கள் மணவிலக்கு, ஜீவனாம்சம், தத்தெடுப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்கும் பல வெளிநாட்டுக் குடும்பங்கள் இலவச சட்ட உதவிக்குத் தகுதி பெறுவதில்லை.

கடந்த மாதம் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த நிலையம் அவர்களுக்கு உதவ முற்படுவதாக ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம்நாத் விஜயகுமார் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

இந்தப் புதிய நிலையம் இதுவரை 28 குடும்பங்களை ஆதரித்து வருகிறது. அந்தக் குடும்பங்களில் ஏழு, புரோ போனோ எஸ்ஜியிடமிருந்து சட்ட ரீதியான உதவியைப் பெற்றுள்ளன.

‘புரோ போனோ எஸ்ஜி’யின் துணை இயக்குநராகவும் பிரதிநிதித்துவ பிரிவின் துணைத் தலைவராகவும் உள்ளார் திரு பிரேம்நாத். சமூக ஊழியர்கள் சேவையாற்றும் நாடுகடந்த குடும்பப் பராமரிப்பு நிலையத்திலிருந்து அவர் செயல்படுகிறார். 

தாஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் 2012ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்ற திரு பிரேம்நாத், தொடக்கத்தில் வர்த்தக சட்டத்துறையில் பணியாற்றினார்.

காலப்போக்கில் குற்றவியல் சட்டத்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. குற்றவியல் வழக்குகளைக் கையாளத் தொடங்கிய பின்னர், வசதி குறைந்த கட்சிக்காரர்களை இலவசமாகப் பிரதிநிதிக்கத் தொடங்கினார்.

தக்க நேரத்தில் உதவிக்கரம் நீட்டியதால் பிறர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுவதைப் பலமுறை கண்டதால் இலவச சேவையை திரு பிரேம்நாத் தொடர்ந்து செய்து வருகிறார்.

உதவி தேவைப்படுவோர் தயக்கமின்றி முன்வரவேண்டும்

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற திருமணங்களில் 33 விழுக்காடு, சிங்கப்பூரருக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே நிகழ்ந்ததாக அரசாங்கத்தின் மக்கள் தொகை அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த விகிதம், 2012ஆம் ஆண்டு 40 விழுக்காடு ஆக இருந்தது.

இத்தகையோரின் விகிதம் குறைந்து வந்தாலும் இவர்கள் மறக்கப்படக்கூடாது என்றார் திரு பிரேம்நாத்.

“தெற்கு மத்திய குடும்பச் சேவை நிலையத்துடன் புரோ போனோ எஸ்ஜியின் ஒத்துழைப்பு கூடியுள்ளது. உதவி தேவைப்படுவோர் பல்வேறு இடங்களை நாடவேண்டிய அவசியம் இன்றி ஒரே கூரையின்கீழ் வெவ்வேறு நபர்களை அணுகலாம்,” என்று அவர் கூறினார்.

வழக்கறிஞர்களின் உதவியுடன் குடும்பங்கள் பல்வேறு தெரிவுகளை ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று திரு பிரேம்நாத் கூறினார்.

சமூகத்திற்கு முக்கியமாக இலவச சட்ட சேவைகள் சேரவேண்டும் என்று மனதார விரும்புவதாகக் குறிப்பிட்ட திரு பிரேம்நாத், இளம் தலைமுறை வழக்கறிஞர்களை இத்துறைக்குள் ஈர்க்கவும் அவர் விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்