கடற்கரையை நேசிப்பவர்கள் செந்தோசா தீவில் உள்ள பலவான் கடற்கரைக்கு மீண்டும் செல்லத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடற்கரை பெரிய அளவிலான எண்ணெய்க் கசிவால் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
“பலவான் கடற்கரையில் நீர் விளையாட்டுகள் மீண்டும் தொடங்கிவிட்டன என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இனி துடுப்புப் பலகை விளையாட்டு, நீரில் மூழ்கி எழுதல், சூரிய ஒளியை உள்வாங்குதல் ஆகிய நடவடிக்கைகள் அங்கு மீண்டும் தொடங்கிவிட்டன,” என்று செந்தோசா வளர்ச்சிக் கழகம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17ஆம் தேதி) அன்று தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியது.
மேலும் தஞ்சோங் கடற்கரையில் நீரின் தரம் வழக்கமான நிலைக்குத் திரும்பிய பின் அங்கு மீண்டும் நீர் விளையாட்டுகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி செந்தோசாவின் சிலோசோ கடற்கரை வருகையாளர்களுக்கு திறந்துவிடப்பட்ட பின் தற்பொழுது நீர் விளையாட்டுகளுக்கு திறந்துவிடப்படும் இரண்டாவது கடற்கரையாக பலவான் கடற்கரை விளங்குகிறது.
பாசிர் பாஞ்சாங் நீர் முனையத்தில் ஜூன் 14ஆம் தேதி தூர்வார் படகு ஒன்று மற்றொரு கப்பலுடன் மோதியதில் சிங்கப்பூரைச் சுற்றிய கடலின் பெரும் பகுதிகளில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் நெதர்லாந்து கொடி தாங்கிய வோக்ஸ் மேக்சிமா என்ற படகு சிங்கப்பூரைச் சேர்ந்த மரின் ஹானர் என்ற எண்ணெய் கப்பலுடன் மேதியது.
இந்நிலையில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவை ஒட்டிய கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முடிவுற்றபோதிலும் அங்கு அனைத்து நீர் நடவடிக்கைகளுக்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.