சமூக ஒற்றுமையையும் பராமரிப்பையும் வலியுறுத்திய தேசிய தின விழா

சமூக ஒற்றுமையையும் பராமரிப்பையும் வலியுறுத்திய தேசிய தின விழா

2 mins read
bb983472-7f8c-44bd-bf3c-12a05efbddf8
முஸ்லிம் சிறுநீரகச் செயல் சங்கத்தின் சார்பாக, சிறுநீரக நோயாளிகளுக்குக் காசோலையும் மளிகைப் பொருள் பைகளும் வழங்கினார் சிறப்பு விருந்தினர் டாக்டர் ஹமீது ரசாக் (வலமிருந்து இரண்டாவது). - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

சமூக ஒற்றுமையையும் பராமரிப்பையும் வலியுறுத்தியது, முஸ்லிம் சிறுநீரகச் செயல் சங்கம் (எம்கேஏசி) சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) நடத்திய தேசிய தின பற்றுறுதிச் சடங்கு.

இதில் சிறுநீரக நோயாளிகள் 10 பேர் காசோலையும் மளிகைப் பொருள் பைகளும் பெற்றனர்.

சங்கத்தின் சார்பில் அவற்றை வழங்கினார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த முடவியல் அறுவை சிகிச்சை நிபுணரும் ஜூரோங் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் துணை ஆலோசகருமான டாக்டர் ஹமீது ரசாக்.

விழாவைக் காண வந்த சிறுநீரக நோயாளிகள், குடும்பத்தினர், தொண்டூழியர்கள் என சுமார் 50 பேர் முன்னிலையில் உரையாற்றிய டாக்டர் ஹமீது, ‘எம்கேஏசி’ போன்ற லாப நோக்கமற்ற அமைப்புகளின் செயல்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.

சிறுநீரக நோயை மருத்துவராக மட்டுமல்ல, அதனால் பாதிப்படைந்த உறவினருக்குப் பராமரிப்பாளராகவும் செயல்பட்டவர் டாக்டர் ஹமீது. அந்த அனுபவம் அவருக்கு சமூக ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

“என்னைப் போன்ற மருத்துவர்களால் ஒரு நோய்க்கு எளிதாக சிகிச்சையளிக்க முடியும். ஆனால் ஒரு நோயினால் ஏற்படக்கூடிய சமூக விளைவுகளைச் சமாளிப்பது மிகக் கடினம்.

“சிறுநீரக நோயால் பாதிப்படைவோருடன் சேர்த்து, அவர்களுடைய குடும்பத்தினரும் மனதளவில் பாதிப்படைகின்றனர். அவர்களுக்குக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எம்கேஏசி மனநல உதவி வழங்கி வருகிறது,” என்றார் டாக்டர் ஹமீது.

‘சமூக ஒற்றுமையே நாட்டின் அடையாளம்’

தேசிய தினத்தையொட்டி, ‘ஒரு நாடு என்றால் என்ன?’ என்ற கேள்வியையும் ஆராய்ந்தார் டாக்டர் ஹமீது.

மக்கள் ஒன்றுகூடுவதையும் தாண்டி, மக்களுக்குக்கிடையே குடும்ப, சமூக அளவில் நிலவும் நம்பிக்கையே ஒரு நாட்டுக்கு அர்த்தமளிக்கிறது என்றார் அவர்.

அவ்வகையில், அதிக உதவி தேவைப்படுவோரை சிங்கப்பூர் எவ்வாறு பராமரிக்கிறது என்பதே அதன் வளர்ச்சியின் அளவுகோல் என்று அவர் சொன்னார்.

“உதவி தேவைப்படுவோருக்கு நாம் இன்னும் கூடுதல் செய்யலாம். அதற்கு எம்கேஏசி போன்ற அதிகமான அமைப்புகள் அரசாங்கத்தோடும் தனியார் நிறுவனங்களோடும் இணைந்து பராமரிப்பு வழங்கவேண்டும்,” என்றார் டாக்டர் ஹமீது.

கூடுதல் சமூக அமைப்புகள் அரசாங்கம், தனியார் நிறுவனங்களுடனான இணைமுயற்சிகள் மேற்கொண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்றார் டாக்டர் ஹமீது.
கூடுதல் சமூக அமைப்புகள் அரசாங்கம், தனியார் நிறுவனங்களுடனான இணைமுயற்சிகள் மேற்கொண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்றார் டாக்டர் ஹமீது. - படம்: ரவி சிங்காரம்

சமூகமாக ஒன்றுபடாவிட்டால் 59 ஆண்டுகள் கட்டியமைத்த நாடு, 59 வினாடிகளில்கூட சிதைந்துபோகலாம் என அவர் எச்சரித்தார்.

“இன்று நாம் அடைந்துள்ள நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் முயற்சிகளே. நாம் நன்றி செலுத்தும் ஒரே வழி, அடுத்த தலைமுறையினருக்கு உதவுவதே,” என்றார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையாற்றிவரும் ‘எம்கேஏசி’ தலைவர் அமீரலி அப்டீலி.

தற்போது 270 பயனாளிகளுக்கு நிதி, உணவு, மருத்துவம், கல்வி, சமூக நிகழ்ச்சிகள், இல்ல வருகைகள் என பல வகைகளில் பராமரிப்பு வழங்குகிறது எம்கேஏசி. மாதத்திற்கு இருமுறை நோயாளிகளுக்கு நிதி, மளிகைப் பொருள்களையும் அது வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்