பிரிட்டனில் அண்மையில் ஏற்பட்ட கலவரம் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் சிங்கப்பூரின் சட்டங்கள், கொள்கைகள் ஆகியவை வகுக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் சண்முகம் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 16) கூறினார்.
சிங்கப்பூர் காவல்துறையும் உள்துறை அமைச்சும் சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் கல்வி உபகாரச் சம்பள நிகழ்ச்சியை நடத்தின. அதில் உரையாற்றிய அமைச்சர் சண்முகம், ஜூலை 29ஆம் தேதி மூன்று பெண்கள் கொல்லப்பட்ட பின் நிகழ்ந்த வெறுப்புப் பேச்சும், பொய்யான தகவல்களுமே பிரிட்டனில் கலவரத்தைத் தூண்டியதாகத் தெரிவித்தார்.
இதில் பிரிட்டிஷ் காவல் துறை 17 வயது ஆண் சந்தேக நபரைக் கைது செய்தது. அவர் ஓர் இஸ்லாமிய குடியேறி என பொய்யாக சமூக ஊடகத்தில் தகவல் பரவியதை அடுத்து மறுநாள் சவுத்போர்ட் நகரில் வன்முறையுடன் கூடிய முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், நகரின் பள்ளிவாசலைத் தாக்கும் முயற்சி ஆகியவை இடம்பெற்றதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.
இதில் பொதுமக்களிடையே பிரபலமானவர்கள், இணையவாசிகள் ஆகியோர் குடிநுழைவு, மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள்மீது வெறுப்புணர்வு ஆகியவற்றின் மூலம் எரிகிற கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றினர் என்று அமைச்சர் சண்முகம் கூறினார். இதனால், பிரிட்டன் 13 ஆண்டுகள் காணாத மோசமான கலவரத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்தார்.
“இங்கு அதுபோன்ற சூழல் ஏற்படாதிருக்க கவனமாக வகுக்கப்பட்ட சட்ட கட்டமைப்பு உள்ளது. அத்துடன், சட்டம், ஒழுங்குக்கு முன்னுரிமை தரும் கொள்கைகளும் கவனமாக வகுக்கப்பட்டுள்ளன,” என்று திரு சண்முகம் விளக்கினார்.
சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் முக்கியம் என்றபோதிலும், பொய்யுரை, சமய, இன வெறுப்புப் பேச்சு அல்லது வன்முறையைத் தூண்டக்கூடிய பேச்சு, அதிலும் குறிப்பாக சட்ட, ஒழுங்கை பாதிக்கக்கூடியவற்றை சகித்துக்கொள்ள மாட்டோம் என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
சிங்கப்பூரில் ஆர்ப்பாட்டங்கள் பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் முறைப்படுத்தப்படுவதாக திரு சண்முகம் கூறினார். மக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவிக்க திரளும் சம்பவங்கள், அவை உண்மையான, நல்ல எண்ணத்துடன் கூடிய தலைவர்களின் தலைமையில் தொடங்கலாம். ஆனால், அவற்றில் வன்முறையைத் தூண்டும் எண்ணம் கொண்டவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டங்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வது வழக்கமாக நடப்பதே என்று அவர் சுட்டினார்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் காவல்துறையினர் இக்கட்டான நிலையில் விடப்பட்டு பின்னர் அவர்களே வன்முறையாளர்கள் என்று பழிசுமத்தப்பட்டு, தாக்கப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“இதுபோன்ற சூழலில் நாங்கள் காவல்துறையினரை விட்டுவிடுவதில்லை. ஏனெனில் ஒருவர் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமெனில், அவர்கள் அதற்கென அனுமதி பெற வேண்டும். இதில் காவல் துறையினர் மதிப்பீடு செய்வர். அந்த மதிப்பீட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டால் அனுமதி மறுக்கப்படும்,” என்று அமைச்சர் விளக்கினார்.