ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தேசிய தினப் பேரணி 2024ல் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றி ஆய்வாளர்கள் முன்னுரைத்து உள்ளனர்.
உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்கும் வழிமுறை, குடும்பங்களுக்கு கூடுதல் ஆதரவு, சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பின் பலத்தைக் கூட்டுவது போன்றவை அந்த அம்சங்களில் சில.
இவற்றை அறிவிக்க பிரதமர் லாரன்ஸ் வோங்கின் முதல் தேசிய தினப் பேரணி உரை பொருத்தமான ஒரு தளமாக அமையும் என்கின்றனர் பகுப்பாய்வாளர்கள்.
இனி வரவிருக்கும் ஆண்டுகளில் சிங்கப்பூருக்கு என்ன செய்யவேண்டும் என்னும் கண்ணோட்டத்தை அவர் வெளிப்படுத்தும் வேளையில் இந்த அறிவிப்புகள் அமையலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
தமது உரையில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை பிரதமர் தமது தேசிய தினச் செய்தியில் கோடி காட்டி இருந்தார்.
ஊழியர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குவது, வாழ்க்கைச் செலவினத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, குடும்பங்களுக்கான ஆதரவை அதிகப்படுத்துவது, சமூகப் பாதுகாப்பு அம்சங்களை மேலும் பலமாக்குவது ஆகியவை பற்றி திரு வோங் அந்தச் செய்தியில் குறிப்பிட்டு இருந்தார்.
மே மாதம் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்ற திரு வோங், உலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு சிறந்த சிங்கப்பூரை உருவாக்குவதற்கான புதிய தீர்வுகளை நாடவேண்டி வரும் என்றும் தமது செய்தியில் குறிப்பிட்டு இருந்தார்.
மூத்த மக்கள்தொகைக்கான ஆதரவுக்கரத்தை மேலும் விரிவாக்குவது, ஓய்வுக்கால வசதிகள் மீது கவனம் செலுத்துவது ஆகியன சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான வழிகள் என்று ஓசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் செலினா லிங் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், குழந்தைப் பராமரிப்புக்கும் முதியோர் பராமரிப்புக்கும் கூடுதல் விடுப்பை எதிர்பார்ப்பதாகச் சொன்னார் சமூக ஆதரவு கொள்கைக் ஆய்வுக் கழகத்தின் துணை முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் டான் எர்ன் செர்.
குழந்தைப் பருவ கல்வி மற்றும் மூத்தோர் பகல்நேரப் பராமரிப்புத் துறைகளில் மாற்றத்தையும் அவர் எதிர்பார்க்கிறார்.

