தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தரை வீடுகளில் வசிப்போரை அச்சுறுத்தும் கொள்ளைச் சம்பவங்கள்

3 mins read
2b73b5cf-fb0c-48d7-9d52-062727b94c73
 ‘சுற்றுக்காவலில் குடிமக்கள்’ எனும் தொண்டூழியராகச் சேர்ந்து குடியிருப்பாளர்களுக்குப் பாதுகாப்பு விதிமுறைகளை எடுத்துரைப்பது போன்றவற்றின் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம் எனக் காவல்துறை கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ரயில் பசுமைப்பாதை, புக்கிட் தீமா சாலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள தனியார் தரை வீடுகள் சிலவற்றில் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக சிங்கப்பூர் காவல்துறை அண்மையில் கண்டறிந்தது.

அந்தத் தனியார் வீடுகள் பெரும்பாலாக காட்டுப் பகுதிகளுக்கும் பூங்கா இணைப்புக் கட்டமைப்புகளும் அருகில் இருப்பதாக தெரியவந்தது.

ஜூன் மாதத்திலிருந்து இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவங்கள் சீன நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டுக் கும்பலுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த மூன்று பேருக்கு அப்பாற்பட்டு, விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் 14 சீன நாட்டவர்களை சிங்கப்பூர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. ஆனால், அந்த 14 பேரும் தற்போது சிங்கப்பூரில் இல்லாததால், சிங்கப்பூர் காவல்துறை விசாரணைக்கு சீன அதிகாரிகளின் உதவியை நாடி வருகிறது.

இவர்கள் சிறிய குழுக்களாக செயல்படுவதாகவும் வீட்டின் சுவர்கள் அல்லது வேலிகளின் மேல் ஏறி வீட்டிற்குள் நுழைவதாகவும் நம்பப்படுகிறது. விலை மதிப்புள்ள பொருள்களை திருடிய பிறகு சம்பவ இடத்திலிருந்து விரைந்து திருடிய பொருள்களை பக்கத்தில் இருக்கும் காடுகளில் மறைத்து தப்பி விடுவதாகவும் நம்பப்படுகிறது.

குற்றம் புரிவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னர் சந்தேக நபர்கள் சமூக வருகை அனுமதி மூலம் சிங்கப்பூருக்கு வந்ததாக நம்பப்படுகிறது.

இதையடுத்து, சிங்கப்பூர் காவல்துறை பாதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. அதோடு, தீவு முழுவதும் தரை வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுடன் இணைந்து குற்றவாளிகளாகச் சந்தேகிக்கப்படும் நபர்களை வீடுகளுக்குள் நுழைவதை தடுப்பதற்கான முயற்சிகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட இடங்களில், அசையும் படமெடுக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சூழ்நிலை குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க அவை உதவுகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களில் சிங்கப்பூர் காவல்துறை அதன் ஆளில்லா வானுர்திகளையும் பயன்படுத்தி வருகிறது.

அதன் மூலம் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளையும் நபர்களையும் எளிதில் அடையாளம் கண்டு காவல்துறை விரைவாகச் செயல்பட முடியும்.

இதற்கு அப்பாற்பட்டு தரை வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று கருத்தாய்வு செய்வது, காட்டுப் பகுதி, பூங்கா இணைப்புக் கட்டமைப்புகளுக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குவது ஆகியவற்றில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

தனிப்பட்ட முறையில் குடியிருப்பாளர்களும் தங்களை தற்காத்துக்கொள்ள வீட்டைச் சுற்றி கூடுதலான பாதுகாப்பு, வீட்டின் சன்னல்களிலும் கதவுகளிலும் உறுதியான பூட்டு பொருத்துவது, வீட்டில் எச்சரிக்கை முறை கருவிகளைப் பொருத்துவது, உள்சுற்றுக் கண்காணிப்புத் தொலைக்காட்சியைப் பொருத்துவது, வீட்டில் இருக்கும் விலை மதிப்புள்ள பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, ‘சுற்றுக்காவலில் குடிமக்கள்’ எனும் தொண்டூழியராகச் சேர்ந்து குடியிருப்பாளர்களுக்குப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கற்றுத்தருவது போன்றவற்றின் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று காவல்துறை கூறியது.

கொள்ளைச் சம்பவம் ஏற்படும்போது முதலில் நிதானமாக இருந்து குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குற்றவாளியின் தோற்றத்தை நன்கு கவனித்து உடனடியாக தன்னிடம் புகார் அளிக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், சொங் பாங் வளாகத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) மாலை இடம்பெற்ற தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், “சிங்கப்பூரில் பொதுவாக தரை வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் மிகக் குறைவு.

செய்தியாளர்களிடம் பேசும் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம்.
செய்தியாளர்களிடம் பேசும் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம். - படம்: சாவ் பாவ்

“வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து தரை வீடுகளைக் குறிவைத்து கொள்ளையடிப்பது ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது. தங்களின் குடியிருப்புகளில் ஏதாவது சந்தேகத்திற்குரிய நிகழ்வை கண்டால் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருந்து காவல்துறையிடம் உடனடியாக புகாரளிக்க வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்