கியவ் மீது 3வது ஏவுகணையைப் பாய்ச்சிய ரஷ்யா

1 mins read
c3dddb24-0c1b-4147-9bcb-a1959e0557a8
ஆகஸ்ட் 4ஆம் தேதி கியவ்வில் வெளியில் தெரியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஆகாயத் தற்காப்புச் சாதனம். - படம்: ஏஏஃப்பி

கியவ்: ரஷ்யா, ஆகஸ்ட் 18ஆம் தேதி 3வது முறையாக கியவ் மீது ஏவுகணையைப் பாய்ச்சியிருக்கிறது.

ஆனால் ஆகாய ஆயுதங்கள் அனைத்தும் நகரை நெருங்குவதற்கு முன்பு அழிக்கப்பட்டுவிட்டதாக உக்ரேனிய தலைநகரத்தின் ராணுவ நிர்வாகம் தெரிவித்தது.

“ஆகஸ்ட் மாதத்தில் தலைநகர் மீது மூன்றாவது முறையாக ஏவுகணை பாய்ச்சப்பட்டது. குறிப்பாக ஆறு நாள் இடைவெளியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது,” என்று கியவ் ராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி போப்கோ கூறினார்.

வடகொரியாவின் ஏவுகணையைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உக்ரேனின் ஆகாயத் தற்காப்புச் சாதனங்கள், ரஷ்யா பாய்ச்சிய எண்ணற்ற வானூர்திகளை அழித்துவிட்டது என்று போப்கோ மேலும் கூறினார்.

தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்ற அவர், சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றி உடனடியான தகவல் இல்லை என்றார்.

ராய்ட்டர்சால் ஏவுகணைகளின் வகையை தன்னிச்சையாகச் சரிபார்க்க முடியவில்லை.

கியவ்வைத் தாக்க இரண்டு மணி நேரத்துக்கு முன்பு நகரைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் மத்திய, வடகிழக்கு உக்ரேனின் பெரும்பாலான பகுதிகள் விழிப்புநிலையில் வைக்கப்பட்டன. நகரத்தின்மீது ஏவுகணைகள் தாக்கப்படலாம் என்று உக்ரேனிய விமானப் படை முன்னெச்சரிக்கையாக தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்