தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேம்படுத்தப்பட்ட பெற்றோர் விடுப்புத் திட்டம் அறிமுகம்: கூடுதலாக 10 வார விடுப்பு

3 mins read
8f697382-af9e-401f-a011-1c5f0587071c
நிதி அமைச்சின் அதிகாரி அரஷ் ஷா ஹொசைனி தமது மனைவி மற்றும் குழந்தையுடன். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

அரசாங்கம் புதிதாக, பகிர்வு பெற்றோர் விடுப்புத் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.

சிங்கப்பூரராக குழந்தை பிறந்த பின்னர், தாயும் தந்தையும் பகிர்ந்துகொள்ளும் வகையில், சம்பளத்துடனான 10 வார பெற்றோர் விடுப்பை வழங்குகிறது அந்தத் திட்டம்.

பிறந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ள பெற்றோருக்கு சிறந்த முறையில் ஆதரவு அளிக்கவும் தாயும் தந்தையும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதை ஊக்குவிக்கவும் நோக்கம் கொண்டது புதிய திட்டம்.

தற்போது பெற்றோர் இருவருக்கும் வழங்கப்படும் 20 வார விடுப்புக்கு மேல் கூடுதலாக இந்த 10 வார விடுப்பு அவர்களுக்கு வழங்கப்படும்போது மொத்த பெற்றோர் விடுப்பு 30 வாரங்களாக அதிகரிக்கும்.

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தினப் பேரணி உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்று.

சிங்கப்பூரில் பெண்கள் மேம்பாடு காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட திரு வோங், குடும்பத்தைத் தாங்கும் தூணாக தந்தையரும் பராமரிப்பாளராக தாய்மாரும் இருக்கும் நிலைமை மாற வேண்டும் என்றார்.

“இன்றைய உலகில் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.

“குடும்பப் பொறுப்புகளையும் சுமந்துகொண்டு சாதனை இலக்கை எட்டுவது என்பது அவர்களுக்குச் சவாலானது.

“எனவே, தந்தைமார்கள் இன்னும் அதிக பொறுப்பை ஏற்கவேண்டி உள்ளது,” என்றார் பிரதமர்.

தமது நிதி அமைச்சின் அதிகாரியான அரஷ் ஷா ஹொசைனி, வரவுசெலவுத் திட்ட தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு இருந்த வேளையில், தந்தையர் விடுப்பை எடுத்து வீட்டில் சமைப்பது, பிள்ளையின் துணிகளைத் துவைப்பது, வழக்கறிஞராக வேலை செய்யும் மனைவிக்கு ஆதரவாக இருப்பது என்னும் பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டதாக திரு வோங் கூறினார்.

மணம் புரிவதும் குழந்தை பெறுவதும் அவரவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், சிங்கப்பூரர்கள் அத்தகைய விருப்பங்களைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

அத்துடன் தங்களது வாழ்க்கைத்தொழில் போன்ற விருப்பங்களையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டி உள்ளது.

சிங்கப்பூரில் குடும்பத்துக்கு ஏதுவான மேலும் சிறந்த சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. அதிகமான சிங்கப்பூரர்களின் விருப்பங்கள் நிறைவேற இது ஊக்குவிக்கும்.

விடுப்புகளால் முதலாளிகளுக்கு ஏற்படும் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில் பகிர்வு பெற்றோர் விடுப்புத் திட்டம் இரு கட்டங்களாக அறிமுகம் காணும்.

ஆறு வார பகிர்வு பெற்றோர் விடுப்பு 2025 ஏப்ரல் 1 முதல் நடப்புக்கு வரும்.

தொடர்ந்து, 2026 ஏப்ரல் 1 முதல், 10 வார விடுப்பு முழுமையாக அமலுக்கு வரும்.

தற்போதைய பகிர்வு விடுப்புத் திட்டத்திற்கு மாற்றாக புதிய திட்டம் அமையும்.

தாய்மார்கள் தங்களுடைய நான்கு வார மகப்பேறு விடுப்பை தங்களது கணவருடன் பகிர்ந்துகொள்ள தற்போதைய திட்டம் அனுமதிக்கிறது என்றார் பிரதமர்.

இருப்பினும், வேலை செய்யும் கணவர் தமது மனைவிக்கான விடுப்பை எடுக்கத் தயங்குவதால் மொத்தம் 6 விழுக்காட்டு தந்தையரே பகிர்வு விடுப்பைப் பயன்படுத்தி உள்ளதாக தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறி இருந்தார்.

ஆண்டுக்கு $400 மில்லியன் கூடுதல் செலவு

10 வார புதிய பகிர்வு விடுப்புக்கான தொகையை அரசாங்கம் செலுத்தும் என்றும் அதிகபட்சமாக வாரம் ஒன்றுக்கு $2,500 அல்லது மாதம் $10,000 என்ற அளவில் அது இருக்கும் என்றும் தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவு கூறியது.

திட்டம் 2026 ஏப்ரலில் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னர், அந்தத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு $400 மில்லியன் கூடுதல் செலவாகும் என்றும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்