சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அவற்றின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது முதல் தேசிய தினப் பேரணி உரையின்போது தெரிவித்தார்.
பள்ளி நூலகங்கள், ஆராய்ச்சிக்கூடங்கள், கற்றலுக்காகப் பயன்படுத்தும் அறைகள் ஆகியவை இதில் அடங்கும்.
கற்றலுக்குத் தொழில்நுட்பம் மேலும் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் வோங் கூறினார்.
“ஆசிரியர்கள் வேலை செய்ய ஏற்புடைய இடமாகப் பள்ளிகள் இருப்பது உறுதி செய்யப்படும். அதே போல மாணவர்கள் கல்வி கற்கவும் ஒருவருக்கொருவருடன் தொடர்பில் இருக்கவும் ஒன்றிணைந்து செயல்படவும் ஏற்புடைய சூழலைக் கொண்ட இடமாக பள்ளிகள் இருக்கும்,” என்றார் பிரதமர் வோங்.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், கற்றல் தொடர்பாகக் கூடுதல் உதவி தேவைப்படும் மாணவர்கள் ஆகியோரை இன்னும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள பள்ளிகளுக்குக் கூடுதல் வளங்கள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்தப் பள்ளிகள் கூடுதல் நிதி உதவியுடன் கூடுதல் ஆசிரியர்கள், ஊழியர்களைப் பெறும் என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
“இந்த மாணவர்கள் சமூக அளவிலான கட்டமைப்பை வளர்த்துக்கொள்ள கூடுதல் உதவி வழங்கப்படும். இந்தக் கட்டமைப்பை அவர்கள் எதிர்காலத்தில் பயன்படுத்தி பலனடையலாம்,” என்று அவர் கூறினார்.
அனைத்துப் பள்ளிகளும் நல்ல தரமான பள்ளிகள் என்பதை சிலர் நம்புவதில்லை என்று குறிப்பிட்ட திரு வோங், மாணவர்கள் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் அவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக உறுதி அளித்தார்.