பிள்ளை வளர்ப்புக்கான செலவுகளைச் சமாளிக்கக் கூடுதல் உதவி வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
மூன்றாவது பிள்ளையைப் பெற்றெடுப்பது குறித்து திட்டமிட்டு வரும் பெற்றோர் அல்லது ஏற்கெனவே மூன்று அல்லது அதற்கும் அதிகமான பிள்ளைகளைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு அந்த ஆதரவு வழங்கப்படும் என்றார் அவர்.
“திருமண பந்தத்தில் இணைந்து குழந்தைகளைப் பெற்றெடுத்து, கூடுதல் பிள்ளைகளைப் பெற்றெடுக்க விரும்பும் தம்பதிகள் உள்ளனர். ஆனால் அதன் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை நினைத்து அந்தத் தம்பதியர் தயங்குகின்றனர்.
“ஒவ்வொரு பிள்ளையும் வளரும்போது அவர்களுக்குத் தேவையான பொருள்கள், அவர்களை வளர்க்க ஏற்படும் செலவுகள் ஆகியவை அதிகரிக்கின்றன. பள்ளி, குடும்பத்துக்கான மளிகைப் பொருள்கள் ஆகியவற்றுக்காக ஏற்படும் செலவுகளையும் கடந்து கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இவை அனைத்தும் ஒட்டுமொத்த அளவில் மிக விரைவாக அதிகரிக்கலாம்.
“இத்திட்டம் குறித்த விவரங்களை ஆராய்ந்து வருகிறோம். அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யும்போது இதுகுறித்து நல்ல செய்தியைத் தர விரும்புகிறேன்,” என்று பிரதமர் வோங் கூறினார்.