தற்போது குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்கு 16 வார விடுப்பும் தந்தைக்கு நான்கு வார விடுப்பும் சம்பளத்துடன் அனுமதிக்கப்படுகிறது. அந்த இருபது வாரத்துக்கான சம்பளத்தை அரசாங்கம் வழங்குகிறது.
தந்தையர் விடுப்பில் இரண்டு வாரங்கள் தன்விருப்ப அடிப்படையில் எடுக்கும் முறை இவ்வாண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
2025 ஏப்ரல் 1 முதல் அந்த இரு வார விடுப்பைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.
2025 ஏப்ரல் 1லிருந்து பிறக்கும் குழந்தைகளின் தந்தையருக்கு அந்தப் புதிய முறை பொருந்தும்.
முதலாளிகள் நான்கு வார தந்தையர் விடுப்பை தங்களது ஊழியர்களுக்கு அனுமதிப்பது அப்போது முதல் கட்டாயமாக்கப்படும என்று பிரதமர் வோங் தமது தேசியப் பேரணி உரையில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் பெண்கள் மேம்பாடு காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட திரு வோங், குடும்பத்தைத் தாங்கும் தூணாக தந்தையரும் பராமரிப்பாளராக தாய்மாரும் இருக்கும் நிலைமை மாற வேண்டும் என்றார்.
“இன்றைய உலகில் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். குடும்பப் பொறுப்புகளையும் சுமந்துகொண்டு சாதனை இலக்கை எட்டுவது என்பது அவர்களுக்குச் சவாலானது. எனவே, தந்தைமார்கள் இன்னும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டி உள்ளது,” என்றார் பிரதமர்.
தமது நிதி அமைச்சின் அதிகாரிகயான அர்ஷ் ஷா ஹொசைனி, வரவுசெலவுத் திட்ட தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு இருந்த வேளையில், தந்தையர் விடுப்பை எடுத்து வீட்டில் சமைப்பது, பிள்ளையின் துணிகளைத் துவைப்பது, வழக்கறிஞராக வேலை செய்யும் மனைவிக்கு ஆதரவாக இருப்பது என்னும் பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டதாக திரு வோங் கூறினார்.

