தனது பத்து வயது மகளிடம் ஆபாசப் படங்களைக் காட்டி தன்னிடம் பாலியல் செயலில் ஈடுபட வைத்த தந்தைக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்குத் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு பேசிய நீதிபதி கெஸ்லெர் சோ, “இது, அவமானகரமானது, மிகவும் தவறான செயல்,” என்று குறிப்பிட்டார்.
“உங்கள் மகளுக்கு எதிராக நீங்கள் செய்த செயல் மிகவும் மோசமான குற்றச்செயலாகும்,” என்றார் அவர்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி சிறுவர் மற்றும் இளையர் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை 55 வயது தந்தை ஒப்புக்கொண்டார்.
இந்தச் சம்பவத்தில் சிறுமி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தந்தையின் அடையாளம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
21வயதுக்கு உட்பட்டவரிடம் ஆபாசப் படங்களைக் காட்டியது, ஆபாசப் படங்களை வைத்திருந்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
நீதிமன்ற விசாரணையின்போது பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் யோயேன்ஸ் இங், 2019ல் குற்றச்செயல் நடந்தபோது அந்த ஆடவர், மனைவி, மாமனார், மாமியார், இரண்டு மகன்கள் பாதிக்கப்பட்ட மகள் ஆகியோருடன் வசித்து வந்தார் என்று தெரிவித்தார்.
வழக்கமாக மதுபானங்களை அருந்தும் அவர், அந்த ஆண்டில் ஒரு நாள் போதை அதிகரித்ததால் தனது மகளிடம் பாலியல் இன்பம் பெற விரும்பினார். பின்னர் மகளை அழைத்து தனது அந்தரங்க உறுப்புகளை தொடச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு மறுப்பு தெரிவித்த மகளின் கையைப் பிடித்து தகாத செயலில் அவர் ஈடுபட வைத்தார்.
இதே போன்ற மூன்று அல்லது நான்கு சம்பவங்களில் அவர் மகளிடம் ஆபாசப் படங்களைக் காட்டியுள்ளார்.
சிறுமிக்கு அசௌகரியமாக இருந்தாலும் வெளியில் சொல்லவில்லை. ஆனால் 2023 பிப்ரவரியில் காவல்துறையிடம் சிறுமி புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். எந்த காரணத்தினால் அவர் காவல்துறையில் புகார் அளிக்க முன்வந்தார் என்பது நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்ட நபரின் கைப்பேசியிலிருந்து 140 ஆபாசப் படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

