தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வானத்தை அலங்கரித்த அரிய பெருநிலவு

2 mins read
30a6c40c-969b-4ed6-9fa8-e28713f6c88a
இவ்வாண்டின் முதல் பெருநிலவின் அரிய காட்சி. - படம்: இவான் கோ/ஃபேஸ்புக்
multi-img1 of 3

இவ்வாண்டின் முதல் பெருநிலவை சரியான இடத்திலிருந்து படம்பிடிப்பதற்காக ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று இவான் கோ, மெர்லயன் பூங்காவிற்கு ஓடினார்.

இரவு 7.45 முதல் 8 மணிக்குள் மெரினா பே சேண்ட்ஸ் கட்டடத்தின் உச்சியில் நிலவு வெளிப்படும் என்று அவர் எதிர்பார்த்தார். அவரது ஊகம் சரியாக இருந்தது.

“நிலவை பல காட்சிகள் எடுத்ததில் மகிழ்ச்சியடைந்தேன்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

‘எம்பிஎஸ் ஸ்கைபார்க்’ பின்னணியில் நிலவை படம் எடுப்பது எனது முக்கிய நோக்கமாக இருந்தது, ஆனால் மற்றொரு புகைப்படக் கலைஞர் அக்காட்சிகளை படம் எடுத்தார். அதன் பிறகு அவரது இடத்தில் நானும் படம் எடுத்தேன். உதயமாகும் நிலவின் காட்சியை படம்பிடிக்க முடிந்தது. கண்ணாடியில்லா கேனன் ஆர்7 கேமராவில் டெலிஃபோட்டோ லென்சை பொருத்திப் படம் எடுத்ததால் அந்த அரிய காட்சி தெளிவாகப் பதிவானது.

கேமராவின் தொழில்நுட்பமும் அவரது பொறுமையும் வீண்போகவில்லை.

100,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிளவுட் ஸ்பாட்டிங் அண்ட் ஸ்கை ஸ்பாட்டிங் என்ற ஃபேஸ்புக் குழுவில் அவர் தனது பெருநிலவுப் படங்களை பதிவேற்றினார். அதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பங்கள் கிடைத்தன.

ஆகஸ்ட் 19ஆம் தேதி வானத்தை அலங்கரித்த கண்கவர் பெருநிலவின் காட்சிகளை பலர் பார்த்து ரசித்தனர். 80க்கும் மேற்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டன. பிரதமர் லாரன்ஸ் வோங்கும் சமூக ஊடகத்தில் தான் எடுத்த பெருநிலவின் படத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பிரதமர் வோங்கின் புகைப்படத்தில் மேகத்தில் நிலவின் ஒரு பகுதி மறைந்திருந்தது.

“எனது அலுவலகத்தில் இருந்து பெருநிலவு தென்பட்டதைப் பார்த்தேன்.அந்த அரிய காட்சி உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் படத்துடன் பதிவிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்