சக ஊழியரின் நிர்வாணப் படங்களை மற்றவர்களிடம் காட்டியதை ஒப்புக்கொண்ட பெண்

2 mins read
d18c01a1-f2e3-421b-adc6-52256bdd7eec
பெண்ணின் நிர்வாணப் படங்கள் டெலிராம் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. - படம்: இணையம்

சக ஊழியர் ஆடைகள் இன்றி இருப்பதைக் காட்டும் படங்களைத் தம்முடன் பணிபுரியும் மற்றவர்களிடம் காட்டியதைப் பெண் ஒருவர் ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணைத் தமது செயல் அவமானப்படுத்தும் என்று தெரிந்தும் அப்பெண் அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று அந்த 22 வயது பெண் ஒப்புக்கொண்டார்.

இக்குற்றத்தை அவர் 2023ஆம் ஆண்டில் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அவர் மாணவர் பராமரிப்பு ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் காக்க குற்றம் புரிந்த பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்பெண் அந்த மாணவர் பராமரிப்பு நிலையத்தில் தொடர்ந்து பணிபுரிகிறாரா என்ற விவரத்தை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அப்போது 21 வயது என்றும் அவரும் அவரது முன்னாள் காதலரும் ஆடையில்லாமல் எடுத்துக்கொண்ட படங்களை டெலிகிராம் செயலி மூலம் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் காதலர்களாக இருந்தபோது அப்படங்களை எடுத்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களுக்கு இடையிலான உறவு முறிந்ததும் அப்படங்கள் நீக்கப்படும் என்று ஒருவருக்கொருவர் உறுதி அளித்துக்கொண்டனர்.

ஆனால் அப்பெண்ணின் முன்னாள் காதலர் படங்களை நீக்கவில்லை.

அதற்குப் பதிலாக தமது முன்னாள் காதலியின் நிர்வாணப் படங்களை அப்பெண்ணின் சக ஊழியரிடம் அவர் அனுப்பிவைத்தார்.

அந்தப் படங்களில் அப்பெண்ணின் முகத்தைப் பார்க்க முடிந்தது.

அப்படங்களைப் பெற்றுக்கொண்ட பெண் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையிடத்தில் இருந்தபோது அவற்றை மூன்று சக ஊழியர்களிடம் காட்டினார்.

இந்நிலையில், அதே மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் 23 வயது ஆடவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த ஆடவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நிர்வாணப் படங்களைப் பிறரிடம் காட்டிய பெண்ணுக்கும் நன்கு அறிமுகமானவர்.

பழிவாங்கும் நோக்கில் அந்த நிர்வாணப் படங்கள் டெலிகிராம் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதையடுத்து, 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 1ஆம் தேதி அளிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்