தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்தோர் பராமரிப்பு உழைப்பின் மதிப்பு ஆண்டுக்கு $1.28 பி.: ஆய்வு கண்டறிந்தது

2 mins read
f99c6062-e7c2-404b-b6dd-c07a98d4b0e4
பராமரிப்பாளர்கள் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 33 மணி நேரம் சேவையாற்றுவதாக ஆய்வு கண்டறிந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மூத்தோரைப் பராமரிக்க வழங்கப்படும் சேவைகளின் மதிப்பு ஆண்டுக்கு $1.28 பில்லியன் என அண்மையில் நடத்தப்பட்ட உள்ளூர் ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.

டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி நடத்திய அந்த ஆய்வின் முடிவுகள், ‘மூப்படைதல் மற்றும் உடல்நல ஆராய்ச்சி’ என்னும் பொருள்படும் ஆங்கிலச் சஞ்சிகையில் ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

பராமரிப்பாளர்கள் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 33 மணி நேரம் சேவையாற்றுவதாகக் குறிப்பிட்ட ஆய்வறிக்கை, அவர்களின் பணிகளையும் வரிசைப்படுத்தியது.

மற்றவர்களுடன் உரையாட 75 வயது மற்றும் அதற்கும் அதிக வயதுடைய மூத்தோருக்கு உதவுவது, அவர்களின் தேவைகளை நிர்வகிப்பது, உணர்வுபூர்வமான ஆதரவை அந்த மூத்தோருக்கு வழங்குவது ஆகியன பராமரிப்பாளர்கள் ஈடுபடும் பணிகள்.

வேகமாக மூப்படைந்து வரும் சிங்கப்பூரின் மக்கள்தொகை ஒருபுறமிருக்க, ஒரு வரையறைக்குள் நின்றுவிடாத பராமரிப்புச் சேவையின் நேரங்களுக்கு பணமதிப்பைப் பொருத்தி சிங்கப்பூரில் நடத்தப்பட்டு உள்ள முதல் ஆய்வு இது.

மூத்தோர் தங்களது அடிப்படை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பாளர்களிடம் இருந்து சராசரியாக வாரம் ஒன்றுக்கு 60.5 மணி நேர பராமரிப்பைப் பெறுகிறார்கள் என்றது ஆய்வு.

பிள்ளைகள், வாழ்க்கைத்துணை மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் அடிப்படைப் பராமரிப்பாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.

வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் உடன்பிறந்தோர் இரண்டாம் நிலை பராமரிப்பாளர்.

“முதியோருக்கு வழங்கப்படும் பராமரிப்பில் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் ஈடுபடுவது என்பது முக்கியமான அம்சம்.

“எனவேதான் அந்த முறைசாரா முதியோர் பராமரிப்பை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்,” என்று மூப்படைதல் ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பின் முதன்மை ஆராய்ச்சி அறிவியலாளரான டாக்டர் அபிஜித் விசாரியா கூறினார்.

2019ஆம் ஆண்டின் முழுநேர சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர் மற்றும் இதர தனிநபர் பராமரிப்புப் பணியாளர்களின் இடைநிலை ஊதியத்தின் அடிப்படையில் பராமரிப்பாளர்களின் ஊதியம் கணக்கிடப்பட்டது. அந்த ஊதியம் மணிக்கு $8.30 முதல் $11.22 வரை மதிப்பிடப்பட்டது.

அதன் அடிப்படையில், அடிப்படைப் பராமரிப்பாளர்கள் ஆண்டுக்கு $15,959 மதிப்புள்ள சேவைகளையும் இரண்டாம் நிலை பராமரிப்பாளர்கள் $4,062 மதிப்புள்ள சேவைகளையும் வழங்குவதாக ஆய்வு கண்டறிந்தது.

குறிப்புச் சொற்கள்