புதிய பல்கலைக்கழக இளநிலைக் கல்வித் திட்டத்தின்மூலம் இஸ்லாத்திலுள்ள அறிவுபூர்வ மரபின் உன்னதத்தையும் தற்காலிகக் கல்வித் துறைகளையும் கல்வி முறைகளையும் ஒருங்கிணைப்பதில் முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் நம்பிக்கை கொண்டுள்ளதாக சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் நசிருதீன் முகம்மது நாசிர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் இஸ்லாமிய கல்லூரி அமைக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங், இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது குறித்து, பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் முஃப்தி, தமது நன்றியை வெளிப்படுத்தினார்.
புதிய திட்டம் குறித்து தம் ஆர்வத்தை வெளிப்படுத்திய முஃப்தி, சிங்கப்பூரில் வருங்கால சமயத் தலைவர்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இஸ்லாமிய கல்விக்கான சையத் இசா செமாய்த் உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ள ஹனினா, சித்தி நூருல் ஃபாத்திமா ஆகிய சமய மாணவர்களைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட முஃப்தி, அந்தப் பெண்கள் ஜோர்தானில் சமயக்கல்வியைப் பயில்வதாக விவரித்தார்.
“கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னர் நானும் முயிசிலிருந்து இத்தகைய உபகாரச் சம்பளத்தைப் பெற்றேன். அதனால் எனக்குப் பல கதவுகள் திறந்தன. அத்துடன், முக்கியமான பல வழிகளில் என்னால் பங்காற்ற முடிந்தது. அந்த இரு சமயக் கல்விமான்களின் கனவுகளையும் குறிக்கோளையும் அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள ஆவலாய் இருந்தேன்,” என்று அவர் கூறினார்.
சமூக-சமய ரீதியான சிக்கல்கள் கொண்ட நிச்சயமற்ற உலகச் சூழலில் இஸ்லாமிய சமய உயர்கல்விக்கானத் தெரிவை உள்ளூரிலும் வழங்க வேண்டும் என்று முஃப்தி கூறினார்.
“நான் உள்பட, பலர் உள்ளூர் மதராசா பள்ளிகளுக்குச் சென்று பின்னர் வெளிநாடுகளில் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் பயின்றபோதும் தற்போது நம் சமூகம் சந்தித்துவரும் தனித்தன்மையான சவால்களையும் சூழல்களையும் நாம் கருத்தில் கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக, தற்காலச் சமூகங்களுக்கான இஸ்லாத்தில் முதுநிலை பல்கலைக்கழகச் சான்றிதழ் சிங்கப்பூரில் வழங்கப்படுவதையும் முஃப்தி சுட்டினார். “அத்துடன், ஆர்சிபிஎஸ் எனப்படும் வெற்றிமிகு சமூகங்களுக்கான ஆய்வுத் திட்டம் ஒன்றை நடத்தி சமயத்துறையில் ஆய்வுக்குரிய துடிப்புணர்வைச் சேர்த்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் நமது முன்னோர்களால் நிறுவப்பட்ட மதராசா சமயப் பள்ளிகள் தென்கிழக்காசிய வட்டாரத்திலிருந்து திறனாளர்களை ஈர்ப்பதாகக் கூறிய முஃப்தி, அந்தப் பள்ளியிலிருந்து கல்விச் சான்றிதழ் பெற்று வெளிவந்தவர்கள் பலர் சமூகத் தலைவர்களாகத் திகழ்ந்து வருவதைச் சுட்டினார்.
“பெரும் பங்களிப்பு ஆற்றும் காலம் இப்போது நமக்கு வந்துவிட்டது. இந்தக் கல்லூரி, சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தின் பெருமையாகத் திகழவிருக்கிறது. துடிப்பான, நம்பிக்கைமிக்க, மீள்திறன் கொண்ட வெற்றிகரமான முஸ்லிம் சமுகத்தை வடிவமைப்பதில் இந்தக் கல்லூரி பெரும் பங்காற்றும்,” என்று அவர் கூறினார்.